வெளியானது இந்தியாவின் மேலும் ஒரு புதிய கிரிக்கெட் தொடர் – எங்கே, எப்போது, முழுவிவரம் இதோ

IND
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா பங்கேற்று வருகிறது. ஜூலை 7-ஆம் தேதியன்று சௌதம்டனில் துவங்கிய அந்த தொடரின் முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்துக்கு கேப்டன் ரோகித் சர்மா திரும்பிய முதல் போட்டியிலேயே தக்க பதிலடி கொடுத்தது. இந்தத் தொடருக்குப் பின் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் இந்தியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது.

அதில் முதலாவதாக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் மற்றொரு நட்சத்திரம் ஷிகர் தவான் கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதை தொடர்ந்து டி20 உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 29-ஆம் தேதி வெஸ்ட் இண்டீசில் துவங்கி ஆகஸ்ட் 7-ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் நிறைவு பெறுகிறது.

- Advertisement -

புதிய தொடர்:
அந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேராக நாடு திரும்பும் இந்தியா ஆகஸ்டு 27-ஆம் தேதி இலங்கையில் துவங்கும் புகழ் பெற்ற ஆசிய கோப்பையில் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற ஆசிய கண்டத்து அணிகளை எதிர்கொள்கிறது. டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த ஆசிய கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானையும் இந்தியா சந்திக்க உள்ளது. செப்டம்பர் 11-ஆம் தேதி நிறைவுக்கு வரும் ஆசிய கோப்பையை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பும் இந்தியா டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசி தொடராக டி20 உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை தனது சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொள்கிறது.

இப்படி அடுத்தடுத்த தொடர்கள் நடைபெறும் நிலையில் புதிதாக இந்தியா பங்கேற்கும் ஒரு கிரிக்கெட் தொடர் பற்றிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கால அட்டவணையின்படி வெஸ்ட் இந்திய சுற்றுப்பயணத்துக்கு பின்பாக ஆசிய கோப்பைக்கு முன்பாக 20 நாட்கள் எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்காத நிலைமை இருந்தது. தற்போது அதை நிரப்பும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பின் ஜிம்பாப்வே நாட்டிற்கு செல்லும் இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

2-வது தர இந்தியா:
ஜிம்பாப்வே போன்ற சிறிய நாடு தரத்தில் மட்டுமல்லாமல் பொருளாதாரத்திலும் சமீப காலங்களில் ரொம்பவே பின்தங்கி கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது. எனவே அவர்களுக்கு உதவும் வகையிலும் வாய்ப்பின்றி தவிக்கும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையிலும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா பங்கேற்கிறது. அதில் சமீபத்திய அயர்லாந்து டி20 தொடரில் விளையாடியதைப்போல 2-வது தர இந்திய அணி பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற முதன்மை வீரர்கள் ஆசிய கோப்பைக்கு தயாராவார்கள் என்பதால் இத்தொடரில் பெரும்பாலும் இளம் வீரர்கள் அயர்லாந்து தொடரில் பயிற்சியாளராக செயல்பட்ட ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்தியா பங்கேற்கும் ஒருநாள் தொடர் ஐசிசி ஒன்டே சூப்பர் லீக் தொடரில் இடம் பெறாத நிலையில் இந்த தொடர் அதில் இடம்பெற உள்ளதாக தெரிகிறது. இருப்பினும் 2023 உலகக் கோப்பையை நடத்துவதால் முதல் அணியாக ஏற்கனவே தகுதி பெற்று விட்டதால் அதை பற்றி இந்தியா கவலைப்படத் தேவையில்லை. கடைசியாக கடந்த 2016ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய ஜிம்பாப்வேயில் 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியில் பங்கேற்றது.

- Advertisement -

அட்டவணை:
அதன்பின் தற்போது 6 வருடங்களுக்குப்பின் நடைபெறும் இந்த தொடர் வழக்கம்போல ஜிம்பாப்வேயின் தலைநகர் ஹராரேயில் நடைபெற உள்ளது. இதுபற்றி அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரி பேசியது பின்வருமாறு. “இந்தியாவுக்கு எதிரான போட்டிகளை நடத்த நாங்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கிறோம்.

இதையும் படிங்க : ஹூ ஹூம் இது வேலைக்கு ஆகாது. தலையை தொங்கபோட்ட படி வெளியேறிய கோலி – ரசிகர்கள் அதிருப்தி

ஜிம்பாப்வே வீரர்கள் இந்திய வீரர்களுக்கு எதிராக மோதுவதற்கு இது பெரிய வாய்ப்பாகும். இது எங்களது இளம் வீரர்களுக்கும் உத்வேகத்தை கொடுக்கும் நல்ல தொடராக இருக்கும் என நம்புகிறோம்” என்று கூறினார். இதையடுத்து இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 18, 20 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு ஹராரே நகரில் நடைபெற உள்ளது.

Advertisement