துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ரவுண்ட் அனந்தபூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 12ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 525 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக 189 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இசான் கிசான் சதமடித்து 111 ரன்களும் தமிழக வீரர் பாபா இந்திரஜித் 78 ரன்களும் குவித்தனர். மேலும் மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் 43, ரஜத் படிடார் 40 ரன்கள் குவித்து தங்கள் அணியை வலுப்படுத்தினர்.
ட்ராவை நோக்கி:
அவர்களுடன் மானவ் சுதர் தம்முடைய பங்கிற்கு அரை சதமடித்து 82 ரன்களும் அன்சுல் கம்போஜ் 38 ரன்களும் எடுத்தனர். கூடவே ஆரம்பத்தில் காயத்தை சந்தித்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முதலுதவிகளை எடுத்துக் கொண்டு மீண்டும் விளையாடி 58 ரன்கள் குவித்தார். இந்தியா பி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா பி அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் தமிழக வீரர் ஜெகதீசன் ஆகியோர் 129 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதில் ஜெகதீசன் அரை சதமடித்து 70 ரன்கள் குவித்த போது அன்சுல் கம்போஜ் அவுட்டாக்கினார். அதோடு நிற்காத அவர் அடுத்து வந்த முசீர் கான் 1, சர்பராஸ் கான் 16, ரிங்கு சிங் 6, நித்திஷ் ரெட்டி 2 என முக்கிய பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் காலி செய்தார்.
வெற்றி யாருக்கு:
போதாக்குறைக்கு தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் 13, சாய கிசோர் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் சதமடித்து 143* ரன்கள் குவித்து போராடி வருகிறார். அதனால் 3வது நாள் முடிவில் 309-7 ரன்கள் எடுத்துள்ள இந்தியா பி இன்னும் 216 ரன்கள் பின்தங்கியுள்ளது.
இதையும் படிங்க: 488 ரன்ஸ்.. ஸ்ரேயாஸ் ஐயர் அணியை பந்தாடிய திலக் வர்மா சூப்பர் கம்பேக்.. 2வது தோல்வியில் தப்புமா?
அந்த வகையில் இன்னும் முதல் இன்னிங்ஸே முடிவடையாததால் இப்போட்டி நாளைய கடைசி நாளில் டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புள்ளது. அது போன்ற சூழ்நிலையில் 216 ரன்களுக்குள் இந்தியா பி அணியின் கடைசி 3 விக்கெட்டுகளை எடுத்து முன்னிலைப் பெற்றால் ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணி 3 புள்ளிகள் பெறும். இல்லையேல் அதே புள்ளிகளை இந்தியா பி அணி பெறும்.



