இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 2 போட்டிகளில் முடிவில் சமநிலையில் இருக்கிறது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா ஸ்டீவ் ஸ்மித் 101, டிராவிஸ் ஹெட் 152 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் குவித்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெய்ஸ்வால் 4, கில் 1, விராட் கோலி 3, ரிஷப் பண்ட் 9, கேப்டன் ரோஹித் 10 ரன்களில் அவுட்டாகி மெகா ஏமாற்றத்தை கொடுத்தார்கள். அதனால் 74-5 என திணறிய இந்தியாவுக்கு மறுபுறம் கே.எல். ராகுல் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஜடேஜாவுடன் சேர்ந்து 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் கடுமையாக போராடி 84 ரன்கள் குவித்து அவுட்டானார்.
தப்பிய இந்தியா:
அதற்கடுத்ததாக வந்த நிதிஷ் ரெட்டி போராடி 16 (16) ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இருப்பினும் மறுபுறம் தம்முடைய பங்கிற்கு நங்கூரமாக விளையாடிய ஜடேஜா அரை சதமடித்தார். ஆனால் முக்கிய நேரத்தில் 77 ரன்களில் அவர் அவுட்டானதால் 1 விக்கெட்டை மட்டுமே வைத்திருந்த இந்தியா ஃபாலோ ஆன் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஒருவேளை அப்படி நடந்தால் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் காபா பிட்ச்சில் 5வது நாள் பேட்டிங் செய்வது மிகவும் என்பதுடன் இந்திய பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்த்து ரசிகர்கள் வேதனையில் உள்ளார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜஸ்ப்ரித் பும்ரா – ஆகாஷ் தீப் ஆகியோர் மிகவும் தில்லாக பேட்டிங் செய்து ஆஸ்திரேலியாவுக்கு சவாலை கொடுத்தனர்.
காப்பாற்றிய பும்ரா – ஆகாஷ்:
தொடர்ந்து அபாரமாக விளையாடிய அந்த ஜோடியில் ஆகாஷ் தீப் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 27* (31), பும்ரா 1 சிக்ஸருடன் 10* (27) ரன்கள் எடுத்து 39* ரன்கள் பார்ட்னர்ஷிபி அமைத்து ஃபாலோ ஆனை தவிர்த்து இந்தியாவின் மானத்தை காப்பாற்றினார்கள். அதை கம்பீர் ரோகித், கோலி உள்ளிட்ட இந்திய அணியினர் உடைமாற்றும் அருகில் கொண்டாடினார்கள். இறுதியில் நிறைவுக்கு வந்த நான்காவது நாள் முடிவில் 252-9 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் 193 ரன்கள் பின்தங்கியுள்ளது. தற்போதைய நிலையில் இந்தியா குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துள்ளது.
இதையும் படிங்க: அவரோடு இவரை ஒப்பிட முடியாது.. ஆனாலும் பும்ரா ரொம்பவே ஸ்பெஷல் பிளேயர் – ஆலன் பார்டர் பாராட்டு
சொல்லப்போனால் 5வது நாளில் மழை பெய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. அப்படியே மழை வழி விட்டாலும் இந்திய பேட்ஸ்மேன்களும் தங்களது தவறை உணர்ந்து விளையாடி தோல்வியை தவிர்க்க பிரகாச வாய்ப்புள்ளது. அப்படி தோல்வியை தவிர்த்தால் கடைசி 2 போட்டிகளில் நன்றாக விளையாடும் பட்சத்தில் இந்தத் தொடரையே இந்தியா வெல்வதற்கும் வாய்ப்பு உருவாகும்.



