நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியிலேயே 46க்கு ஆல் அவுட்டான இந்தியா கடைசியில் போராடியும் வெற்றி காண முடியவில்லை. அதனால் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் தோல்வியை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியது. அந்த நிலையில் இத்தொடரின் இரண்டாவது போட்டி அக்டோபர் 24ஆம் தேதி புனேவில் துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 259 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேவோன் கான்வே 76, ரச்சின் ரவீந்திரா 65 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 3, வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளை எடுத்தனர். பின்னர் விளையாடிய இந்திய பேட்ஸ்மேன்கள் பிட்ச் சவாலாக இருக்கிறது என்று தெரிந்தும் சுமாராகவே பேட்டிங் செய்தனர்.
இந்தியா சொதப்பல் சாதனை:
குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா 0, விராட் கோலி 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஜெய்ஸ்வால் 30, கில் 30 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார்கள். ரிஷப் பண்ட் 18, சர்பராஸ் கான் 11, அஸ்வின் 4 ரன்களில் பெவிலியன் திரும்பிய நிலையில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 18* ரன்கள் எடுத்தும் இந்தியாவை வெறும் 156 ரன்களுக்கு நியூசிலாந்து சுருட்டி வீசியது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக மிட்சேல் சான்ட்னர் 53 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை சாய்த்தார். அதன் வாயிலாக இந்தப் போட்டியில் நியூசிலாந்து 103 ரன்கள் முன்னிலையும் பெற்றது. இது போக பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூஸிலாந்து 356 ரன்கள் முன்னிலை பெற்று வெற்றியும் பெற்றது.
மோசமான பேட்டிங்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் நடைபெற்ற அடுத்தடுத்த போட்டிகளில் எதிரணிக்கு 100க்கும் மேற்பட்ட ரன்களை இந்தியா இப்படி முன்னிலையாகக் கொடுப்பது 23 வருடங்கள் கழித்து இதுவே முதல் முறையாகும். கடைசியாக 2001ஆம் ஆண்டு மும்பை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 173, 274 ரன்கள் முன்னிலையை கொடுத்திருந்தது. இதனால் இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2023இல் மிஸ்.. இந்தியா மாதிரி நாங்க அந்த மட்டமான வேலையை செய்யாம நேர்மையா ஜெய்ப்போம்.. கமின்ஸ் பேட்டி
அப்படி நடந்தால் 12 வருடங்கள் கழித்து இந்தியா சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைக்கும். மொத்தத்தில் இப்போட்டியில் இந்தியா வெளிப்படுத்திய செயல்பாட்டை முன்னாள் நியூசிலாந்து வீரர் இயன் ஸ்மித் “இப்போட்டியில் இந்தியா வெளிப்படுத்திய பேட்டிங் செயல்பாடு 46க்கு ஆல் அவுட்டான கடந்த போட்டியை விட மோசமானது. குறிப்பாக இந்த சூழ்நிலையில் ஷாட் செலக்சன் மோசம்” என்று நேரலையில் விமர்சித்தார்.



