ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ தங்களது சொந்த மண்ணில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1 – 0 (2) என்ற கணக்கில் வென்றது. குறிப்பாக 2வது போட்டியில் 413 ரன்களை வெற்றிகரமாக சேசிங் செய்த இந்தியா ஏ அணி அபார வென்றது. அடுத்ததாக அவ்விரு அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஏ அணியை 2வது போட்டியில் ஆஸ்திரேலியா ஏ அணி தோற்கடித்தது. அந்த சூழ்நிலையில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி கான்பூரில் அக்டோபர் 5ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
பிரப்சிம்ரன் அபாரம்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா ஏ அணி அதிரடியாக விளையாடி 49.1 ஓவரில் 317 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கூப்பர் கோன்லி 64, லியம் ஸ்காட் 73, கேப்டன் ஜேக் எட்வார்ட்ஸ் 89 ரன்கள் குவித்தனர். இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக ஆயுஸ் பதோனி 2, ஹர்ஷித் ராணா 3, அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்கள்.
அடுத்ததாக 318 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடினார். அவருடன் 83 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அபிஷேக் ஷர்மா 22 (25) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் இந்தப்பக்கம் அசத்திய பிரப்சிம்ரன் சிங் அரை சதத்தை அடித்து அசத்தினர்.
இந்தியா சேசிங்கில் வெற்றி:
அடுத்ததாக வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானம் கலந்த அதிரடியை விளையாடினார். மறுபுறம் தொடர்ந்து ஆஸ்திரேலிய பவுலர்களை வெளுத்து வாங்கிய பிரப்சிம்ரன் 8 பவுண்டரி 7 சிக்ஸருடன் 102 (68) ரன்களை 150 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். அடுத்து வந்த ரியான் பராக் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடி அசத்தினார்.
அவருடன் இணைந்து மிடில் ஓவர்களில் அசத்திய ஸ்ரேயாஸ் 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அரை சதமடித்து 62 (58) ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்த சில ஓவரில் மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரியான் பராக்கும் அரை சதமடித்து 62 (55) ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஆயுஷ் படோனி 21 (20) ரன்களில் அவுட்டானாலும் விப்ராஜ் நிகாம் 24* (32), அர்ஷ்தீப் சிங் 7* (5) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்கள்.
இதையும் படிங்க: 16க்கு 15 வெற்றி.. 16 வருடம் இந்தியாவுக்காக பாடுபட்ட ரோஹித்துக்கு 1 வருஷம் தர முடியாதா? ஃகைப் விமர்சனம்
அதனால் 46 ஓவரில் 322/8 ரன்கள் எடுத்த இந்தியா ஏ கிரிக்கெட் அணி வெறும் 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதன் காரணமாக 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா ஏ சொந்த மண்ணில் தங்களை வலுவான அணி என்பதை நிரூபித்தது. மறுபுறம் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு தன்வீர் சங்கா மற்றும் டோட் முர்ஃபி தலா 4 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.



