ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஏ அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அத்தொடரின் 2வது போட்டியில் 412 ரன்களை சேசிங் செய்த இந்தியா ஏ அணி 1 – 0 (2) என்ற கணக்கில் கோப்பையை வென்றது. அதைத்தொடர்ந்து அவ்விரு அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன.
அத்தொடரின் முதல் போட்டி அக்டோபர் 1ஆம் தேதி கான்பூரில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஏ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு பிரியான்ஸ் ஆர்யா ஆரம்பத்திலேயே அதிரடியாக விளையாடினார்.
ஸ்ரேயாஸ், ஆர்யா அதிரடி:
அவருடன் சேர்ந்து விளையாடிய பிரப்சிம்ரன் சிங் தமது பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் ஓப்பனிங் ஜோடியாக இருக்கும் அவர்கள் இந்தியா ஏ அணிக்காக சேர்ந்து 135 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தைக் கொடுத்தனர். அப்போது பிரப்சிம்ரன் சிங் 56 (53) ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் அசத்திய ஆர்யா அரை சதத்தை அடித்தார்.
அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தம்முடைய பங்கிற்கு ஆஸ்திரேலிய பவுலர்களை அடித்து நொறுக்கி வேகமாக ரன்கள் சேர்த்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஆர்யா 11 பவுண்டரி 5 சிக்சருடன் சதத்தை அடித்து 101 (84) ரன்கள் குவித்து பெவிலியன் திருப்பினார். அடுத்து வந்த ரியான் பராக் டி20 போல அதிரடியாக விளையாடி அசத்தினார்.
இந்தியா அசத்தல்:
இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 75 பந்தில் சதத்தை அடித்தார். தொடர்ந்து அசத்திய அவர் 12 பவுண்டரி 4 சிக்ஸருடன் 110 (83) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார். அதனால் 2025 ஆசியக் கோப்பையில் தம்மை தேர்ந்தெடுக்காத தேர்வுக்குழுவுக்கு அவர் பதிலடியும் கொடுத்தார் என்றே சொல்லலாம். அடுத்ததாக வந்து வெளுத்து வாங்கிய பராக் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக 5 பவுண்டரி 5 சிக்சருடன் 67 (42) ரன்கள் குவித்து அவுட்டானார்.
இதையும் படிங்க: முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கே.எல் ராகுல் இந்த விடயத்தில் அசத்துராரு – வருண் ஆரோன் பேட்டி
அதே போல லோயர் ஆர்டரில் ஆஸ்திரேலிய பவுலர்களை புரட்டி எடுத்த ஆயுஸ் படோனி 4 பவுண்டரி 3 சிக்ஸரை பறக்க விட்டு 50 (27) ரன்கள் குவித்தார். இறுதியில் நிசாந்த் சிந்து 11* (9) ரன்கள் எடுத்த உதவியுடன் 50 ஓவரில் இந்தியா ஏ 413/6 ரன்கள் குவித்து அசத்தியது. ஆஸ்திரேலியா ஏ அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் வில் சுதர்லேண்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.



