துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது ரவுண்ட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி அனந்தபூரில் துவங்கின. அதில் 3வது போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி 290 ரன்கள் குவித்தது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக சம்ஸ் முலானி 89, தானுஷ் கோட்டியான் 53 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா டி சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணி சுமாராக பேட்டிங் செய்து வெறும் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக தேவ்தூத் படிக்கல் 92 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக கலீல் அஹ்மத் 3, ஆகிப் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியா ஏ வெற்றி:
அதைத்தொடர்ந்து 107 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா ஏ அணி மீண்டும் அபாரமாக பேட்டிங் செய்து 380-3 ரன்கள் குவித்து தங்களுடைய 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பிரதம் சிங் சதமடித்து 122, திலக் வர்மா 111*, சஸ்வத் ராவத் 64*, கேப்டன் மயங் அகர்வால் 56 ரன்கள் எடுத்தனர். இறுதியில் 488 ரன்களை துரத்திய இந்தியா டி அணி போராடி டிரா செய்யும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மீண்டும் அந்த அணிக்கு அதர்வா டைட் 0, தேவ்தூத் படிக்கல் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 41, சஞ்சு சாம்சன் 40, யாஸ் துபே 37 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். அதனால் இளம் வீரர் ரிக்கி புய் சதமடித்து 113 ரன்கள் குவித்தும் இந்தியா டி அணியை 301 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா ஏ அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
சொதப்பிய ஸ்ரேயாஸ் அணி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக தானுஷ் கோட்டியான் 4, சம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதனால் முதல் ரவுண்ட் போட்டியில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டெழுந்த மயங் அகர்வால் தலைமையிலான இந்தியா ஏ அணி 6 புள்ளிகளை பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் அந்த அணி தங்களுடைய 3வது ரவுண்ட் போட்டியில் வென்றால் கோப்பையை வெல்வதற்கு வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா – என்ன சாதனை?
அதற்கு 7 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ள இந்தியா பி அணி அதனுடைய 3வது ரவுண்ட் போட்டியில் தோற்க வேண்டும். அதே போல இந்தியா பி, சி அணிகள் தங்களுடைய கடைசி போட்டியில் வென்றால் கோப்பையை வெல்ல பிரகாச வாய்ப்புள்ளது. மறுபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி முதல் ரவுண்டை போலவே இப்போட்டியிலும் படுதோல்வியை சந்தித்தது. அதனால் கடைசிப் போட்டியில் விளையாடுவதற்கு முன்பாகவே அந்த அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை மூட்டை கட்டியுள்ளது.



