ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் இருந்தன.
இவ்வேளையில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி ராஜ்கோட் நகரில் துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியானது நேற்று நடைபெற்ற நான்காம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 434 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த கேப்டன் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவமான ஒரு சாதனைக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். அந்த வகையில் இந்த மூன்றாவது போட்டியின் முதல் இன்னிங்சில் 196 பந்துகளை சந்தித்த ரோகித் சர்மா 14 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர் என 131 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
அவர் அடித்த இந்த சதத்தின் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் : இதுவரை இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 முறை ரோகித் சர்மா சதம் அடிக்கும் போதும் இந்திய அணி அந்த போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வகையில் டெஸ்ட் போட்டிகளில் 10-க்கும் மேற்பட்ட சதம் அடித்து அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்ற ராசியான பேட்ஸ்மேனாக இருப்பது ரோகித் சர்மா மட்டுமே என்கிற தனித்துவமான சாதனையை அவர் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 48 சிக்ஸர்கள்.. இங்கிலாந்துக்கு அதிரடியின் உண்மையான அர்த்தத்தை காட்டிய இந்தியா.. புதிய உலக சாதனை
5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் 3 போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 4 ஆவது டெஸ்ட் போட்டியானது ராஞ்சி நகரில் பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.