IND vs WI : தொடரை வெல்லுமா இந்தியா, போட்டி நடக்கும் அமெரிக்கா லாடர்ஹில் மைதான வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட்

Lauderhill Cricket Stadium Ground
- Advertisement -

வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில் இத்தொடரின் கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடைபெற உள்ளது. அங்கு விளையாட ஆரம்பத்திலேயே ஏற்பட்ட விசா பிரச்சனையை கடந்து அமெரிக்கா சென்றுள்ள இரு அணி வீரர்களும் ஆகஸ்ட் 6, 7 ஆகிய அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் இந்த கடைசி 2 போட்டிகளில் வென்று தொடரை வெல்ல தீவிரமான வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெல்லுமா இந்தியா:
இந்த சுற்றுப்பயணத்தில் ஆரம்பம் முதலே தடுமாறி வரும் வெஸ்ட் இண்டீஸ் இந்த தொடரை கைப்பற்றுவதற்கு இந்த இரு போட்டிகளிலும் வென்றே தீரவேண்டும் என்ற இக்கட்டான நிலைமையில் களமிறங்குகிறது. மறுபுறம் ஆரம்பம் முதலே அட்டகாசமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வரும் இந்தியா அதே புத்துணர்ச்சியுடன் இந்த கடைசி 2 போட்டிகளிலும் சொல்லி அடித்து கோப்பையை முத்தமிட்டு வெற்றியுடன் நாடு திரும்ப போராட உள்ளது.

- Advertisement -

அமெரிக்காவின் லாடர்ஹில்:
இந்த 2 போட்டிகளிலுமே ஆகஸ்ட் 6, 7 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் இருக்கும் லாடர்ஹில் நகரில் இருக்கும் ரீஜினல் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி 8 மணிக்கு நடைபெறுகிறது. பொதுவாகவே கிரிக்கெட் பிரபலமில்லாத அமெரிக்காவில் அதை பிரபலப்படுத்தும் நோக்கில் சமீப காலங்களில் இது போன்ற நிறைய போட்டிகளை நடத்த அந்நாட்டு வாரியம் முயற்சித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2007இல் தோற்றுவிக்கப்பட்டு 20000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் கட்டமைக்கப்பட்ட இம்மைதானத்தில் 2010 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதே மைதானத்தில் ரக்பி, ஸ்கோரர் போன்ற இதர விளையாட்டு போட்டிகளும் நடைபெறுவதால் இந்த மைதானம் பார்ப்பதற்கு சற்று வித்தியாசமாகவே இருக்கும்.

1. வரலாற்றில் இந்த மைதானத்தில் இதுவரை 12 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. இங்கு வரலாற்றில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள வெஸ்ட் இண்டீஸ் 3 வெற்றிகளையும் 3 தோல்விகளையும் சந்தித்தது, 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. இங்கு 2016, 2019 ஆகிய வருடங்களில் இப்போது போல் அடுத்தடுத்த தலா 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்ட இந்தியா 2 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ளது. ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்டது.

3. 2016இல் முதல் முறையாக இவ்விரு அணிகள் இங்கு பலப்பரீட்சை நடத்தியதுபோது முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் எவின் லீவிஸ் 100 (49) ரன்கள் அதிரடியில் 245/6 ரன்கள் குவித்தது. அதை துரத்திய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 62 (27) ரன்களும் கேஎல் ராகுல் 110* (51) ரன்கள் குவித்த போதிலும் கடைசியில் கேப்டன் தோனி 43 (25) ரன்கள் எடுத்து போராடிய நிலையில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்றுப்போனது.

- Advertisement -

4. அதே 2016இல் நடைபெற்ற அடுத்த போட்டியில் அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுக்கள் எடுக்க வெஸ்ட் இண்டீசை 143க்கு சுருட்டிய இந்தியாவை சேசிங் செய்யவிடாமல் மழை தடுத்தது.

5. கடைசியாக கடந்த 2019இல் விராட் கோலி தலைமையில் இங்கு வெஸ்ட் இண்டீசை எதிர்கொண்ட இந்தியா முதல் போட்டியில் 95 ரன்களுக்கு சுருட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதற்கடுத்த போட்டியில் ரோகித் சர்மாவின் 67 (51) ரன்கள் அதிரடியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் வென்றது.

- Advertisement -

அதிக ரன்கள்-விக்கெட்கள்:
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்கள்:
1. ரோகித் சர்மா : 163
2. கேஎல் ராகுல் : 110
3. விராட் கோலி : 63

இந்த மைதானத்தில் சதம் மற்றும் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய பேட்ஸ்மேனாக கேஎல் ராகுல் (110*) உள்ளார். ரோகித் சர்மா மட்டும் அதிகபட்சமாக 2 அரை சதங்கள் அடித்துள்ளார்.

இங்கு அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பவுலர்களாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் (தலா 4) ஆகியோர் உள்ளனர். இந்த மைதானத்தில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 244/4, 2016

வெதர் ரிப்போர்ட்:
இந்த போட்டிகள் நடைபெறும் ப்ளோரிடா நகரில் ஆகஸ்ட் 6, 7 ஆகிய அடுத்தடுத்த நாட்களில் 30 – 50% மழைக்கான வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது. எனவே இந்த 2 போட்டிகளும் மழையின் குறுக்கீட்டுடன் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறுவதை பார்க்க முடியும்.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த லாடர்ஹில் மைதானம் வரலாற்றில் பேட்டிங் பவுலிங் இரண்டுக்குமே சாதகமாக இருந்து வருகிறது. இருப்பினும் இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 160 – 170 அளவில் இருப்பதால் பேட்ஸ்மேன்கள் அதிரடி காட்டுவதைப் பார்க்க முடியும். அதேசமயம் திறமையை வெளிப்படுத்தும் பவுலர்களுக்கு விக்கெட்டுகள் கிடைக்காமல் இருக்காது. மேலும் இங்கு வரலாற்றில் நடைபெற்ற 12 போட்டிகளில் 9 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து 170 ரன்களுக்கு மேல் எடுத்தால் வெற்றி உறுதியென்று கூறலாம்.

Advertisement