வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் கச்சிதமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் ஒயிட் வாஷ் செய்து கோப்பையை முத்தமிட்டு சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த ஜூலை 30-ஆம் தேதியன்று துவங்கியது.
கேப்டன் ரோகித் சர்மா, புவனேஸ்வர் குமார், தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இணைந்துள்ளதால் மேலும் பலமடைந்துள்ள இந்தியா அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்து ரோகித் சர்மா 64 ரன்களும் தினேஷ் கார்த்திக் 41* ரன்களும் எடுத்ததால் 190 ரன்கள் குவித்து பின்னர் வெஸ்ட் இண்டீசை 122 ரன்களுக்கு சுருட்டி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1 – 0* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இத்தொடரின் 2-வது போட்டி ஆகஸ்ட் 1-ஆம் தேதியான இன்று நடைபெற உள்ளது.
தீடீர் மாற்றம்:
இந்த சுற்றுப் பயணத்தில் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் சொந்த மண்ணில் தலைகுனிவுக்கு உள்ளாகியுள்ள வெஸ்ட் இண்டீஸ் இந்த போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய போராட உள்ளது. மறுபுறம் ஆரம்பம் முதலே இளம் வீரர்களின் தரமான செயல்பாடுகளால் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வரும் இந்தியா இந்த போட்டியிலும் வென்று 2 – 0* என்ற கணக்கில் முன்னிலையை அதிகப்படுத்த முழு மூச்சுடன் விளையாட உள்ளது.
அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த போட்டி இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு செயின்ட் கிட்ஸ் & நேவிஸில் இருக்கும் பெசட்ரி நகரில் உள்ள வார்னர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நேற்றே அந்த மைதானத்தை சென்றடைந்த இரு அணி வீரர்களும் இப்போட்டிக்காக தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் இப்போட்டி திட்டமிட்டபடி 8 மணிக்கு துவங்காது என்றும் உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கும் இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கும் துவங்கும் என்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிரிக்கும் ரசிகர்கள்:
ட்ரினிடாட் நகரில் நடைபெற்ற முதல் போட்டியை முடித்துக் கொண்டு இரு நாட்டு வீரர்களும் இந்த மைதானத்திற்கு வந்து சேர்ந்த போதிலும் அவர்களின் லக்கேஜ் இன்னும் வார்னர் பார்க் மைதானத்திற்கு வந்து சேரவில்லை. அதனால் பேட், பந்துகள் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லாமல் வீரர்களால் எப்படி விளையாட முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு சர்வதேசப் போட்டியிலும் இப்படி ஒரு நிலைமையா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
இதை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தனது டுவிட்டரில் கலாய்த்துள்ளார். பொதுவாக நண்பர்களுடன் உள்ளூரில் இணைந்து விளையாடும் போது தான் இதுபோல் போட்டித் துவங்குவதற்கு முன்பாக பேட்டை மறந்துவிட்டோம் பந்தை தொலைத்து விட்டோம் என்ற வகையில் இது போன்ற சிறு பிள்ளைத்தனமான காரணங்களுடன் நமது வீரர்கள் ஜாலியாக கலகலப்பாக விளையாடுவார்கள். ஆனால் ஒரு சர்வதேச கிரிக்கெட்டில் அதுவும் முதல் போட்டி முடிந்து ஒருநாள் இடைவெளி முடிந்தும் லக்கேஜ் வந்து சேராத அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இவ்வளவு அஜாக்கிரதையாக கவனக்குறைவாக நடந்து கொள்கிறதே என்று ரசிகர்கள் கலாய்க்கிறர்கள்.
சந்தேகமான கடைசி 2 டி20:
இதுபோக இத்தொடரின் கடைசி 2 போட்டிகள் அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடைபெற உள்ள நிலையில் அதற்காக இரு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்காகவும் விண்ணப்பிக்கப்பட்டிருந்த விசாவுக்கு அமெரிக்க அரசு இன்னும் அனுமதி கொடுக்காததால் திட்டமிட்ட படி அந்த போட்டி அங்கு நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: IND vs WI : ஒவ்வொரு தொடருக்கும் ஓப்பனிங் வீரர்களை மாற்றாதீங்க, சாம்சனை நம்புங்க – அணி நிர்வாகத்துக்கு முன்னாள் வீரர் கோரிக்கை
ஒருவேளை கடைசிவரை விசா கிடைக்காமல் போனால் இதேபோல் கடைசி நேரத்தில் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடத்தவும் அந்நாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது.



