வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 0 என்ற கணக்கில் வென்ற இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் உலகக்கோப்பை பயணத்தை வெற்றியுடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா களமிறங்குகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, முகமத் சிராஜ், ரவீந்திர ஜடேஜா போன்ற தரமான வீரர்களுடன் களமிறங்கும் இந்தியா நிச்சயமாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம் 2023 உலக கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி வீழ்ந்து கிடக்கும் வெஸ்ட் இண்டீஸ் அதிலிருந்து மீண்டெழுந்து வெற்றிப் பாதையில் நடக்கும் பயணத்தை இப்போதிலிருந்து துவங்குகிறது. எனவே ஷாய் ஹோப் தலைமையில் 2 வருடம் கழித்து சேர்க்கப்பட்டுள்ள சிம்ரோன் ஹெட்மயர், ப்ரெண்டன் கிங், அல்சாரி ஜோசப் போன்ற தரமான வீரர்களைக் கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் இத்தொடரில் வலுவான இந்தியாவுக்கு எதிராக போராடி சொந்த மண்ணில் வெற்றி கண்டு தலை நிமிர தயாராகியுள்ளது.
வரலாற்று புள்ளிவிவரங்கள்:
அதனால் இருநாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடர் ஜூலை 27ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு பார்படாஸ் நகரில் துவங்குகிறது. ஒருநாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் மொத்தமாக 139 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் 70 வெற்றிகளை பெற்று இந்தியா முன்னிலையில் இருக்கும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 63 போட்டிகளில் வென்றுள்ளது. 2 போட்டிகள் டையில் முடிந்த நிலையில் 4 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது.
மேலும் இத்தொடர் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் இவ்விரு அணிகளும் 42 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 20 வெற்றிகளையும் வெஸ்ட் இண்டீஸ் 19 வெற்றிகளையும் பதிவு செய்துள்ள நிலையில் 3 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. அது போக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கடைசியாக களமிறங்கிய 6 போட்டிகளில் 1 மழையால் கைவிடப்பட்ட நிலையில் எஞ்சிய 5 போட்டிகளிலும் இந்தியா வென்றுள்ளது. அத்துடன் மொத்தமாக கடைசியாக இவ்விரு அணிகள் மோதிய 10 ஒருநாள் தொடர்களையும் வென்ற இந்தியா 2019க்குப்பின் ஒரு போட்டியில் கூட வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை சந்தித்ததில்லை.
அதிக ரன்கள், விக்கெட்கள்:
1. இத்தொடர் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அந்த அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 790 (15 இன்னிங்ஸ்)
2. ஷிகர் தவான் : 516 (17 இன்னிங்ஸ்)
3. எம்எஸ் தோனி : 458 (15 இன்னிங்ஸ்)
2. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த இந்திய வீரராக விராட் கோலியும் (4) அதிக அரை சதங்கள் அடித்த இந்திய வீரராக ஷிகர் தவானும் (6) சாதனை படைத்துள்ளனர். இருப்பினும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீரராக யுவராஜ் சிங் உள்ளார் (131, கிங்ஸ்டன், 2009)
3. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த டாப் 3 இந்திய பவுலர்களின் பட்டியல்:
1. அஜித் அகார்கர் : 15
2. ஹர்பஜன் சிங்/உமேஷ் யாதவ் : தலா 13
3. அமித் மிஸ்ரா/குல்தீப் யாதவ் : தலா 11
4. வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் இதுவரை எந்த இந்திய பவுலரும் 5 விக்கெட் ஹால் எடுத்ததில்லை. சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர்களாக புவனேஸ்வர் குமார் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் உள்ளனர் (தலா 4/31)
இதையும் படிங்க:எதிர்கால வீராங்கனைகளுக்கு முன்மாதிரியா இருக்க வேண்டிய நீங்களே இப்படி பண்ணலாமா? – ஹர்மன் ப்ரீத் கவுரை விமர்சித்த அப்ரிடி
5. அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் ஒருநாள் போட்டிகளில் இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச ஸ்கோர் : 339/6, கிங்ஸ்டன், 2009. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பதிவு செய்துள்ள குறைந்தபட்ச ஸ்கோர்: 123 ஆல் அவுட்டாகும்.