
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான இந்திய அணி கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் இந்தியாவின் முன்னனி வீரர்கள் இடம்பெற்றிருந்த சூழ்நிலையில், ஜூலை மாதம் இலங்கைக்கு எதிராக ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களை நடத்த இந்தியா திட்டமிட்டிருக்கிறது என்று அறிவித்தார் பிசிசிஐயின் தலைவர் சவுரவ் கங்குலி. மேலும் இங்கிலாந்து செல்லும் இந்திய வீரர்கள் யாரும் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார்கள் எனவும் இந்தியாவில் இருக்கும் இளம் வீரர்களை கொண்டே இலங்கைக்கு எதிரான இந்திய அணி தேர்ந்தெடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் தேதி அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் என்று திட்டமிடப்பட்டிருந்த தொடரில் இரண்டு டி20 ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி ஜூலை மாதம் 13 ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டியும், 16 ஆம் தேதி இரண்டாவது ஒரு நாள் போட்டியும் நடைபெற இருக்கிறது. கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஜூலை 19ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கடுத்து வரும் 22ஆம் தேதி முதல் டி20 போட்டியும், 24ஆம் தேதி இரண்டாவது டி20 போட்டியும் நடைபெற இருக்கிறது. இத்தொடரின் கடைசி டி20 போட்டியானது ஜூலை மாதம் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதற்கான இந்திய அணி ஜூலை 5ஆம் தேதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் முடிந்து 28ஆம் தேதி மீண்டும் இந்தியாவிற்கு திரும்பும்படி அட்டவணை தயார் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னனி வீரர்கள் இல்லாத இந்திய அணி இலங்கைக்கு எதிரான தொடரில் எப்படி விளையாடும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அனைவரிடமும் எழுந்துள்ளதால் இத்தொடரானது மிகவும் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மேலும் இலங்கை அணியானது, லாசித் மலிங்காவை மீண்டும் அணிக்குள் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. அதன்படி பார்த்தால் லாசித் மலிங்கா இந்தியாவிற்கு எதிரான தொடரிலேயே விளையாடுவார் என்று இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்துக் கொண்டிருக்கின்றனர். லாசித் மலிங்காவின் வருகை இலங்கைக்கு கூடுதல் பலம் என்றே சொல்லலாம். இந்திய அணியிலும் தற்போது பக்காவான ஃபார்மில் இருக்கும் ஷிகர் தவான் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் ஓப்பனிங்கில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்த ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், க்ருணால் பாண்டியா ஆகியோரும் தங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட இந்த தொடரை சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் அனுபவ வீரர்களான ஹர்திக் பாண்டியா, புவனேஷ் குமார், தீபக் சஹார் ஆகியோரும் அணியில் இடம்பிடிக்க இருப்பதால், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியும் பலம் வாய்ந்த அணியாகவே களம் காணவிருக்கிறது.