இலங்கைக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த டி20 தொடரை இந்திய கிரிக்கெட் ஒயிட்வாஷ் செய்து வெற்றி பெற்றது. குறிப்பாக 3 போட்டிகளிலுமே இலங்கை வலுவான நிலையில் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தன்னம்பிக்கையுடன் போராடிய இந்திய அணி இலங்கையை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடித்து கோப்பையை வென்றது.
அதனால் புதிய கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்களது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. அந்த தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இணைந்துள்ளனர்.
அச்சுறுத்தும் மழை:
அதனால் முழு பலத்துடன் களமிறங்கும் இந்தியா டி20 தொடரிலேயே திண்டாட்டமாக செயல்பட்ட இலங்கையை ஒருநாள் தொடரிலும் வீழ்த்தும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அந்த வகையில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அந்தத் தொடர் ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய தேதிகளில் இலங்கையில் உள்ள கொழும்பு நகரில் இருக்கும் ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடைசியாக இம்மைதானத்தில் 2023 ஆசியக் கோப்பை ஃபைனலில் இலங்கையை தெறிக்க விட்ட இந்தியா 50 ரன்களுக்கு சுருட்டி அபார வெற்றி பெற்றதை ரசிகர்களால் மறக்க முடியாது. ஆனால் அதே மைதானத்தில் இம்முறை நடைபெற உள்ள இந்தத் தொடரில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக முதல் போட்டி நடைபெறும் ஜூலை இரண்டாம் தேதி கொழும்பு நகரில் சராசரியாக 70% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது.
இருப்பினும் போட்டி நடைபெறும் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை 50 சதவீதத்துக்கும் குறைவாகவே மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே போல இரண்டாவது போட்டி நடைபெறும் ஜூலை 4ஆம் தேதி 40% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் ஆகஸ்ட் 7ஆம் தேதி மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகமாக இல்லை. எனவே இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அவ்வப்போது மழை குறுக்கிடும் என்பது தெளிவாக தெரிகிறது.
இதையும் படிங்க: தல தோனிக்காக 2021 விதிமுறையை தூசி தட்டி கையிலெடுத்த சிஎஸ்கே.. எதிர்க்கும் காவ்யா மாறன்.. வெளியான தகவல்
ஆனால் 100% மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என்பதால் குறுக்கீட்டுகளையும் தாண்டி இத்தொடர் நடைபெறும் என்று நம்பலாம். குறிப்பாக டி20 தொடரின் கடைசி 2 போட்டிகளில் மழை குறுக்கிட்ட போது ஓவர்கள் குறைக்கப்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. அது போல இந்த ஒருநாள் தொடரின் வெற்றியாளர் தீர்மானிக்கப்படும் அளவுக்கு மழை வழிவிடும் என்று நம்பலாம்.



