அச்சுறுத்த காத்திருக்கும் மழை, 2வது டி20 நடைபெறும் கெளகாத்தி மைதானம் எப்படி, பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Guwahati Cricket Stadim Ground
- Advertisement -

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. விரைவில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசியாக பங்கேற்கும் இத்தொடரின் முதல் போட்டியில் பந்து வீச்சுக்கு சாதகமாக அமைந்த திருவனந்தபுரத்தில் தென்ஆப்பிரிக்காவை 106 ரன்களுக்கு சுருட்டி இந்தியா வென்றது. அப்போட்டியில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் மண்ணைக்கவ்விய தென்னாப்பிரிக்கா 2வது போட்டியில் கொதித்தெழுந்து பேட்டிங்கில் பெரிய ரன்களை சேர்த்து பந்து வீச்சில் பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்ய போராட உள்ளது.

மறுபுறம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக களமிறங்கிய அத்தனை இருதரப்பு தொடர்களிலும் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்றுப் பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் அந்த தோல்விலிருந்து மீண்டெழுந்து ஆஸ்திரேலிய தொடரில் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க துவங்கியுள்ள இந்தியா இந்த தொடரில் தென்னாப்பிரிக்காவையும் வீழ்த்தி வெற்றியுடன் உலகக் கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா பறக்க திட்டமிட்டுள்ளது.

- Advertisement -

கௌகாத்தி மைதானம்:
அதற்கு வெற்றியை பதிவு செய்ய வேண்டிய இத்தொடரின் 2வது போட்டி அக்டோபர் 2ஆம் தேதியன்று அசாம் மாநிலம் கௌகாத்தியில் இருக்கும் டாக்டர் பூப்பேன் ஹசாரிகா மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. சுமார் 40,000 ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து பார்க்கும் வகையில் கடந்த 2012இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த மைதானத்தில் 2017 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1. இருப்பினும் இங்கு 2 சர்வதேச போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. அதில் 1 போட்டியில் சேசிங் செய்த அணி வென்றுள்ளது. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. கடந்த 2017இல் முதல் முறையாக இங்கு நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட இந்தியா 118 ரன்களுக்கு சுருண்டு பின்னர் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 2020இல் நடைபெற இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

3. அந்த வகையில் வரலாற்றில் இங்கு 1 போட்டி மட்டுமே முழுமையாக நடைபெற்றுள்ளதால் இப்போட்டிக்கு முன்பாக தெரிந்து கொள்ள வேண்டிய புள்ளிவிவரங்கள் பெரிதாக ஏதுமில்லை.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
கடைசியாக கடந்த 2020இல் இங்கு இலங்கையை இந்தியா எதிர்கொண்ட போட்டியின் போது டாஸ் வீசப்பட்டதும் ஜோராக வந்த மழை ஒரு பந்து கூட வீச விடாமல் மொத்தமாக ரத்து செய்ய வைத்தது. அதேபோல் ஒரு வருடம் கழித்து இங்கு போட்டி நடைபெறுவதால் அனைத்து டிக்கெட்டுகளையும் வாங்கி ஆவலுடன் காத்திருக்கும் அசாம் ரசிகர்களுக்கு மீண்டும் மிகப்பெரிய ஏமாற்றம் காத்திருக்கிறது. ஏனெனில் இப்போட்டி நடைபெறும் கௌஹாத்தி நகரில் குறிப்பாக போட்டி நாளன்று இரவு நேரத்தில் 99% வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் மழைக்கான வாய்ப்பு 40 – 50% உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதனால் கடந்த முறை போலவே இந்த வருடமும் இப்போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் 2020க்குப்பின் தங்களது ஊரில் இந்தியா பங்கேற்கும் போட்டியை தடை செய்யாமல் குறைந்தபட்சம் நாக்பூர் போல ஓவர்கள் குறைக்கப்பட்ட பாதி போட்டியையாவது நடத்த வழி விடுமாறு அசாம் மாநில ரசிகர்கள் வருண பகவானை வேண்டுகிறார்கள்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
வரலாற்றில் இந்த நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியிலும் சரி சமீபத்திய உள்ளூர் போட்டிகளிலும் சரி இம்மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அதிகப்படியான மேகமூட்டம் இருக்கும் என்பதால் திருவனந்தபுரம் போலவே தீபக் சஹர், அர்ஷிதீப் சிங் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை திணறடிக்க வாய்ப்புள்ளது.

அதனால் ஆரம்ப கட்ட ஓவர்களில் கால சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செட்டிலாகி விளையாடினால் மட்டுமே பேட்ஸ்மேன்களால் ரன்களை எடுக்க முடியும். மேலும் மிடில் ஓவரில் வழக்கம்போல சுழல் பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். இம்மைதானத்தில் நடைபெற்ற சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் சராசரி ஸ்கோர் வெறும் 127 ஆகும்.

இதையும் படிங்க : பென் ஸ்டோக்ஸ் – ஹர்டிக் பாண்டியா இருவரில் யார் பெஸ்ட்? தெ.ஆ ஜாம்பவான் குளூஸ்னர் கருத்து இதோ

எனவே பந்து வீச்சுக்கு சாதகமான இந்த மைதானத்தில் மழையின் அச்சுறுத்தலும் இருப்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு பெறலாம்.

Advertisement