ஹாட்ரிக் வெற்றி பெறுமா இந்தியா, 3வது போட்டி நடக்கும் பெர்த் மைதானம் எப்படி – புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் விளையாடி வரும் இந்தியா தன்னுடைய முதல் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை விராட் கோலியின் அபார ஆட்டத்தால் தோற்கடித்து 2வது போட்டியில் நெதர்லாந்தை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதை தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதியன்று வலுவான தென்னாப்பிரிக்காவை தன்னுடைய 3வது போட்டியில் எதிர்கொள்ளும் இந்தியா இப்போட்டியிலும் ஹாட்ரிக் வெற்றியை ருசித்து நாக் அவுட் சுற்று வாய்ப்பை 100% உறுதி செய்ய போராட உள்ளது. இருப்பினும் கடந்த ஜூலை மாதமும் சமீபத்தில் நடைபெற்ற டி20 தொடரில் இந்தியாவுக்கு அதனுடைய சொந்த மண்ணிலேயே சவாலை கொடுத்த தென்னாப்பிரிக்கா உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்ட தரமான அணியாக திகழ்கிறது.

குறிப்பாக குயின் டீ காக், ரோசவ், டேவிட் மில்லர், ரபாடா, நோர்ட்ஜெ போன்ற நட்சத்திர வீரர்கள் இப்போட்டியில் இந்தியாவுக்கு சவாலை கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம். எனவே அந்த சவாலை சமாளித்து இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவை பொருத்த வரை பும்ரா இல்லாத குறை தெரியாத அளவுக்கு ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோரால் வேகப்பந்து வீச்சு கூட்டணி அசத்தும் நிலையில் விராட் கோலி, சூரியகுமார், ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் மிரட்டுகிறார்கள். அதனால் இப்போட்டில் வெல்வதற்கு ரோகித் – ராகுல் ஆகிய தொடக்க வீரர்கள் அசத்த வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

பெர்த் ஆப்டஸ்:
இப்படி சமமான பலத்தை கொண்ட இவ்விரு அணிகள் மோதும் இப்போட்டி அக்டோபர் 30ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு மேற்கு ஆஸ்ரேலியாவில் உள்ள பெர்த் நகரில் இருக்கும் ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இதன் அருகிலேயே இருக்கும் உலகப் புகழ்பெற்ற வாக்கா (WACA) மைதானத்தில் காலம் காலமாக சர்வதேச போட்டிகள் நடைபெற்ற வந்தது. ஆனால் அதில் உயிருக்கு ஆபத்தான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியன இருப்பதால் அங்கு தற்போது சர்வதேச போட்டிகளை நிறுத்தி விட்ட ஆஸ்திரேலிய வாரியம் பக்கத்திலேயே இந்த புதிய கண்கவர் மைதானத்தை கட்டமைத்துள்ளது.

1. அதனால் கடந்த 2018 முதல் சர்வதேச போட்டிகளை நடத்தி வரும் இந்த மைதானத்தில் இதுவரை 5 டி20 போட்டிகள் மட்டுமே நடைபெற்றுள்ளது. அதில் 3 போட்டிகளில் சேசிங் செய்த அணியும் 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் முதல் முறையாக இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் இப்போது மோதுகின்றன. அதனாலேயே இந்த மைதானத்தில் இதுவரை இந்தியா மற்றும் இந்திய வீரர்களின் செயல்பாடுகளை பார்ப்பதற்கு புள்ளி விவரமும் இல்லை.

வெதர் ரிப்போர்ட்:
இந்த மைதானத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் இப்போட்டி நடைபெறும் அக்டோபர் 30ஆம் தேதியன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என ஆஸ்திரேலிய வானிலை மையம் தெரிவிக்கிறது. குறிப்பாக போட்டி நடைபெறும் உள்ளூர் நேரப்படி இரவு 7 முதல் 11 மணி வரை 4 – 10% மட்டுமே மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவிக்கிறது. இதனால் இப்பொட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
என்னதான் அருகில் இருக்கும் வாக்கா மைதானத்தை மூடி விட்டு இந்த மைதானத்தை உருவாக்கினாலும் இரண்டுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் ஒருசில கிலோ மீட்டராகும். அதனால் உலகிலேயே அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை இயற்கையாகவே கொண்ட வாக்கா மைதானத்தில் இருக்கும் அதே தன்மை இந்த மைதானத்திலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. போதாகுறைக்கு மேகமூட்டத்துடன் குளிர்ந்த வானிலை நிலவும் என்பதால் இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று உறுதியாக நம்பலாம். இங்கு தான் ஜிம்பாப்வே பாகிஸ்தானை வெறும் 1 ரன்னில் தோற்கடித்தது.

அதே சமயம் புதிய பந்தில் ஆரம்ப கட்ட சவாலை சமாளித்து வேகம், பவுன்ஸ் ஆகியவற்றை கணித்து அடிக்கும் பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்களை குவிக்கலாம். மேலும் மிடில் ஓவர்களில் திறமையான சுழல் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுக்கலாம். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 167 ஆகும். இருப்பினும் இது இரவு நேர போட்டி என்பதாலும் இங்கு நிறைய போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement