IND vs RSA : வாழ்வா – சாவா போட்டியில் வெல்லுமா இந்தியா, விசாகபட்டின மைதான பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Vizag Cricket Stadium
Advertisement

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் எதிர்பாராத தொடக்கத்தை பெற்றுள்ளது. ஏனெனில் டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் மிரட்டலாக பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கை அசால்டாக சேசிங் செய்த தென்ஆப்பிரிக்கா கட்டாக்கில் நடைபெற்ற 2-வது போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 149 ரன்கள் இலக்கையும் எளிதாக சேசிங் செய்து சொந்த மண்ணில் ராஜாவாக கருதப்படும் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து தோல்வியை பரிசளித்துள்ளது. அந்த அணிக்கு சமீபத்திய ஐபிஎல் தொடரில் அசத்திய டேவிட் மில்லருடன் முக்கிய வீரர்கள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தேவையான நேரங்களில் கச்சிதமாக செயல்பட்டு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளனர்.

INDvsRSA

மறுபுறம் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய இந்தியா பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் முக்கிய தருணங்களில் சொதப்பி ஒரு வெற்றி கூட பெற முடியாமல் தலை குனியும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. இந்திய அணியைப் பொறுத்தவரை வெற்றி பெறுவதற்கு முதலில் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட் கேப்டன்ஷிப்பில் தேவையற்றதை செய்யாமல் எந்த நேரத்தில் எந்த பவுலரை உபயோகப்படுத்தலாம் என்பது போன்ற அடிப்படையை செய்தாலே போதும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

வாழ்வா – சாவா:
மேலும் பேட்டிங்கில் முதல் போட்டியில் மிரட்டலாக செயல்பட்டதை மனதில் வைத்துக் கொண்டு 3-வது போட்டியில் அனைத்து இந்திய பேட்ஸ்மேன்களும் ரன்களை சேர்த்தால் மட்டுமே வெற்றியை நினைத்து பார்க்க முடியும். அதேபோல் பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் போன்ற தரமான பவுலருக்கு இதர பவுலர்களும் கைகொடுக்க வேண்டும். குறிப்பாக படுமோசமாக மாறியுள்ள சுழல் பந்துவீச்சில் சஹால் போன்ற முக்கிய பவுலர்கள் பொறுப்பை உணர்ந்து குறைவான ரன்களைக் கொடுத்து விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே இந்தியா வெற்றி பெற முடியும்.

IND

தற்போதைய நிலைமையில் இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா 2 – 0* (5) என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளதால் அந்த அணி கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்புள்ளது. எனவே ஜூன் 14இல் நடைபெறும் 3-வது போட்டியில் வென்றால் மட்டுமே சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரின் கோப்பையை வென்று மானத்தை காப்பாற்ற முடியும் என்ற வாழ்வா – சாவா சூழ்நிலையில் இந்தியா களமிறங்குகிறது.

- Advertisement -

விசாகப்பட்டினம்:
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டி ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விசாகப்பட்டினத்தில் இருக்கும் டாக்டர் ஒய் எஸ் ராஜசேகரா ரெட்டி மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. கடந்த 2003இல் உருவாக்கப்பட்ட இந்த அழகிய மைதானம் 27500 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

1. இந்த மைதானத்தில் இதுவரை வரலாற்றில் 3 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 2 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. இங்கு கடந்த 2012இல் நடந்த முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2016இல் நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் தமிழகத்தின் அஸ்வின் 4 விக்கெட்டுகள் எடுத்ததால் அந்த அணி வெறும் 82 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வென்றது.

3. இருப்பினும் கடந்த 2019இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா வெறும் 126 ரன்கள் மட்டுமே எடுத்து பின்னர் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

- Advertisement -

4. எனவே முதல் முறையாக இம்மைதானத்தில் இம்முறை தென் ஆப்பிரிக்காவை சந்திக்கும் இந்தியா வெற்றிக்கு சற்று கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட்:
மேற்குறிப்பிட்ட புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே இந்த மைதானம் வரலாற்றில் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருப்பதை தெளிவாக உணரமுடியும். எனவே கட்டாக் மைதானத்தை போல இந்தப் போட்டியிலும் சுழல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி விக்கெட்டுகள் எடுக்க அதிக வாய்ப்புள்ளது. அதனால் இங்கு சவாலை சந்திக்க வேண்டியுள்ளதால் பேட்ஸ்மேன்கள் நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்தால் ரன்கள் கிடைக்காமல் இருக்காது.

இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் வெறும் 104 என்பதால் இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழிவதை ரசிகர்கள் பார்ப்பது சற்று கடினமாகும். மேலும் இந்த மைதானத்தில் இதற்குமுன் நடைபெற்ற 2 போட்டிகளிலும் சேசிங் செய்த அணிகளே வென்றுள்ளன. அத்துடன் இது இரவு நேர போட்டி என்பதால் டாஸ் வெல்லும் கேப்டன் எந்தவித யோசனையுமின்றி முதலில் பந்து வீச தீர்மானித்து பின்னர் சேசிங் செய்தால் வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : முரட்டு பார்மில் மீண்டும் சதமடித்த ஜோ ரூட் ! ரன்களை மழையாக பொழிந்து கவாஸ்கரை முந்தி புதிய சாதனை

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த போட்டி நடைபெறும் விசாகப்பட்டினத்தில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு எதுவுமில்லை என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement