தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* (4) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதே வேகத்தில் இரண்டாவது போட்டியிலும் விளையாடி தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்க இந்திய அணி தயாராகி உள்ளது.
மறுபுறம் முதல் போட்டியில் தோற்ற தென்னாப்பிரிக்கா இப்போட்டியில் வென்று 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனல் தோல்விக்கும் சேர்த்து பதிலடி கொடுக்க தயாராகியுள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் போட்டி நவம்பர் பத்தாம் தேதி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தென் ஆப்பிரிக்காவின் கிபர்கா நகரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
செயின்ட் ஜார்ஜ் மைதானம்:
1888 – 89 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெறும் இம்மைதானத்தில் 2007 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. 19000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளிலும் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா 3 வெற்றி 1 தோல்வியை பதிவு செய்துள்ளது. 2023இல் இங்கு இந்தியா முதல் முறையாக விளையாடியது. அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
வெதர் ரிப்போர்ட்:
செயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் போட்டி நாளில் சராசரியாக 30 – 50% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. அதனால் இப்போட்டியில் லேசாக மழை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முடிவு கிடைக்கும் அளவுக்கு இப்போட்டி நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
மற்ற தென்னாபிரிக்க மைதானங்களை விட செயின்ட் ஜார்ஜ் பார்க் பிட்ச்சில் பவுன்ஸ் கொஞ்சம் குறைவாக இருக்கும். அதனால் போட்டி செல்ல செல்ல ஸ்பின்னர்கள் இம்மைதானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதே சமயம் புதிய பிட்ச்சில் ஆரம்பத்திலேயே சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கக்கூடும்.
இதையும் படிங்க: நான் ஐ.பி.எல் தொடரில் என் பெயரை பதிவு செய்ததற்கு காரணம் இதுதான் – ஜேம்ஸ் ஆண்டர்சன் பேட்டி
மழைக்கான சூழ்நிலையும் நிலவும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். மொத்தத்தில் இந்த பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகிய இரண்டுக்கும் சமமாக இருக்கும் என்று நம்பலாம். இங்கு வரலாற்றில் நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 169. இங்கு தலா 2 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும் சேசிங் செய்த அணிகளும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எதைத் தீர்மானித்தாலும் வெற்றிக்கு சிறப்பாக செயல்படுவது அவசியமாகிறது.



