IND vs SA : வாழ்வா – சாவா போட்டியில் வெல்லுமா இந்தியா, ராஞ்சி மைதானம் எப்படி, புள்ளிவிவரங்கள் – பிட்ச், வெதர் ரிப்போர்ட்

Ranchi Cricket Stadium Ground
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் தோற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே பின்தங்கியுள்ளது. முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி உலக கோப்பை பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள நிலையில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் அணி இத்தொடரில் விளையாடி வருகிறது. இருப்பினும் லக்னோவில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்த 250 ரன்களை துரத்திய போது கேப்டன் தவான் உள்ளிட்ட டாப் 4 பேட்ஸ்மேன்கள் மெதுவாக விளையாடி சொற்ப ரன்னில் அவுட்டாகி கொடுத்த 51/4 என்ற மோசமான தொடக்கம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பரிசளித்தது.

ஏனெனில் அதன்பின் ஷ்ரேயஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகியோர் முழு மூச்சுடன் போராடிய போதிலும் இந்தியாவை காப்பாற்ற முடியவில்லை. முதல் போட்டியில் மில்லர் – க்ளாஸென் ஆகியோருக்கு எதிராக கடைசிக்கட்ட ஓவர்களில் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கியதாலும் பீல்டிங் முக்கிய கேட்ச்களை கோட்டை விட்டதாலும் பேட்டிங்கில் ஆரம்பத்திலேயே அதிரடியாக ரன்களை குவிக்க தவறியதாலும் சந்தித்த அந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுள்ள இந்தியா சொந்த மண்ணில் இத்தொடரை வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைநிமிர அக்டோபர் 9ஆம் தேதியன்று நடைபெறும் 2வது போட்டியில் வென்றாக வேண்டிய வாழ்வா – சாவா நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

ராஞ்சி மைதானம்:
சமீபத்தில் இதே ஷிகர் தவான் தலைமையில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகளை அதன் சொந்த மண்ணில் சாய்த்த இளம் இந்திய அணி வெல்வதற்கு போராட காத்திருக்கும் இப்போட்டி முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. தோனியின் எழுச்சிக்குப் பின் மிகவும் பிரபலமடைந்த ராஞ்சியில் கடந்த 2010ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானத்தில் கடந்த 2013 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1. அந்த வகையில் வரலாற்றில் இதுவரை இம்மைதானத்தில் 5 ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 2 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் 2 போட்டிகளில் சேஸிங் செய்து அணியும் வென்றுள்ளன. 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் 5 போட்டிகளிலும் பங்கேற்றுள்ள இந்தியா 2 வெற்றிகளையும் 2 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. கடந்த 2013இல் இங்கிலாந்து மற்றும் இலங்கை தோற்கடித்த இந்தியா கடந்த 2016, 2019இல் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற நிலையில் இப்போது முதல் முறையாக தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

புள்ளிவிவரங்கள்:
இந்த மைதானத்தில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 3 பேட்ஸ்மென்கள்:
1. விராட் கோலி : 384
2. ஏஞ்சேலோ மெத்யூஸ் : 139
3. கிளன் மேக்ஸ்வெல் : 139

- Advertisement -

இந்த மைதானத்தில் அதிகபட்சமாக விராட் கோலி மட்டுமே 2 சதங்கள் அடித்துள்ளார். இங்கு அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள பேட்ஸ்மென்கள் விராட் கோலி மற்றும் ஏஞ்சலோ மெத்தியூஸ் : தலா 139* ரன்கள்.

இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்து வீச்சாளர்களின் பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இந்தியாவின் ரவிச்சந்திரன் அஷ்வின் (6) மற்றும் முகமது சமி (5) ஆகியோர் உள்ளனர். இந்த மைதானத்தில் எந்த பவுலரும் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்தில்லை என்ற நிலையில் சிறந்த பந்து வீச்சை இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் (4/73) பதிவு செய்துள்ளார்.

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ராஞ்சி நகரில் போட்டி நாளன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் 25% மட்டுமே மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஒருவேளை மழை குறுக்கிட்டாலும் முதல் போட்டியை போலவே ஓவர்கள் குறைக்கப்பட்டு இப்போட்டியின் முடிவு கிடைக்கும் என்று உறுதியாக நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
வரலாற்றில் ராஞ்சி மைதானம் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருப்பதுடன் நேரம் செல்லசெல்ல பவுலிங்க்கு சாதகமாக மாறும் மைதானமாக பார்க்கப்படுகிறது. அதிலும் இங்கு சுழல் பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சற்று குறைவான உதவியே கிடைக்கும்.

இருப்பினும் மேகமூட்டம் காணப்படும் என்பதால் புதிய பந்தை ஸ்விங் செய்யும் பாஸ்ட் பவுலர்கள் பவர்ப்ளே ஓவர்களில் தாக்கத்துடன் விக்கெட்டுகளை எடுக்கலாம். மேலும் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 253 என்ற நிலையில் லக்னோவைப் போலவே இங்கும் முதலில் பேட்டிங் செய்து 300 ரன்களை எடுப்பது வெற்றிக்கு வித்திடலாம். ஏனெனில் இங்கு 2வது இன்னிங்சில் பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறி பேட்டிங்க்கு சவாலை கொடுக்க அதிக வாய்ப்புள்ளது.

Advertisement