
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 17 ரன்கள் வித்யாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதே வேகத்தில் 2வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி டெஸ்ட் தொடரில் சந்தித்த தோல்விக்காக தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி கொடுக்க இந்திய அணி தயாராகியுள்ளது.
இந்திய அணிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா 2வது போட்டியிலும் அசத்தலாக விளையாடி வெற்றிக்கு உதவுவார்கள் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். மறுபுறம் 2வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய தென்னாப்பிரிக்காவும் தயாராகியுள்ளது. அதனால் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2வது போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது.
அப்போட்டி சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் நகரில் இருக்கும் சாகித் வீரர் நாராயன் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. 2008இல் தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 60000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் வரலாற்றில் இதுவரை ஒரே ஒரு ஒருநாள் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. 2023இல் நடைபெற்ற அப்போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்தியா வென்றது.
ராய்ப்பூர் நகரில் போட்டி நடைபெறும் நாளன்று மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை என இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. அவ்வப்போது வானம் லேசான மேகமூட்டத்துடன் மட்டுமே காணப்படும் என்று தெரிய வருகிறது. அதனால் இந்தப் போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
ராய்ப்பூர் மைதானத்தின் பிட்ச் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றுக்கு சமமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். பகல் நேரத்தில் நல்ல வேகம், பவுன்ஸ் ஆகியவை இருக்கும் என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணி பெரிய ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. புதிய பந்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்து சவாலைக் கொடுப்பார்கள்.
இதையும் படிங்க: முகமது ஷமி இந்த தொடரில் இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது.. அவரை சேர்த்திருக்கனும் – விவரம் இதோ
மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்கள் முக்கிய விக்கெட்டுகளை எடுத்து சவாலைக் கொடுப்பார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க சூழ்நிலையை உணர்ந்து விளையாடுவது அவசியமாகிறது. இரவு நேரத்தில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் பந்து வீசுவது கடினமாகவும் சேசிங் செய்வது இலகுவாகவும் மாறலாம். எனவே டாஸ் வெல்லும் அணியின் கேப்டன் முதலில் பந்து வீசி எதிரணியைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.