இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி-யின் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. கடந்த 2011-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய மண்ணில் முழுவதுமாக நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இதற்காக இந்திய அணியும் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் 15-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
வழக்கமாக இந்தியா பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி என்றாலே பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இந்த போட்டிக்கும் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் ஒரு மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஏனெனில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் அந்த போட்டியானது அக்டோபர் 15-ஆம் தேதி நவராத்திரி விழாவன்று நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அந்த போட்டி மாற்றியமைக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது தொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு ஆலோசனைகளுக்கு பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் பாதுகாப்பு காரணங்களால் மட்டுமே இந்த தேதி மாற்றியமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் நாட்களில் அகமதாபாத் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் கட்டணம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : IND vs WI : ஒருநாள் தொடரில் மாபெரும் சாதனையை செய்ய காத்திருக்கும் விராட் கோலி – சச்சினை ஓரங்கட்ட வாய்ப்பு
அதோடு விமான கட்டணமும் அதிகரித்துள்ளது. எனவே ரசிகர்கள் இந்த போட்டியை காணும் வகையில் முன்கூட்டியே தங்களது திட்டங்களை வகுத்து வருகின்றனர். அவர்களுக்காகவே முன்கூட்டியே இந்த ஆலோசனை நடத்தப்பட்டு தேதி மாற்றம் இருந்தால் உடனடியாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.