ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ஆம் தேதி துவங்கிய டி20 உலக கோப்பை தொடரானது நவம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த டி20 தொடரானது தற்போது தகுதி சுற்று போட்டிகளை கடந்து சுவாரசியமாக நடைபெற்று வரும் வேளையில் அடுத்ததாக சூப்பர் 12 சுற்று போட்டிகள் வரும் 22-ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இம்முறை கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியானது 23-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர் கொள்ள இருக்கிறது.

கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி இன்னும் இரு தினங்களில் நடைபெற உள்ளது தற்போது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பல ஆண்டுகளாகவே இரு அணிகளும் இருநாட்டு தொடரில் பங்கேற்று விளையாடாமல் இதுபோன்ற ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகிறது.
அதேபோன்று பரம எதிரிகளான இரு அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடுவதாலும் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதலாவது போட்டியில் நடைபெறுவதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது.

அந்த வகையில் ஆஸ்திரேலிய நாட்டில் தற்போது குளிர் காலம் நெருங்கி வருவதால் வருகிற 23-ஆம் தேதி மெல்போர்ன் நகரில் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையிலும் 80 சதவீத மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அம்மாநில வானிலை அறிக்கை வெளியாகி உள்ளது. இதன் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அப்படியே போட்டி மழை இன்றி தொடங்கினாலும் நிச்சயம் பாதியிலேயே பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் மீறியும் நடந்தால் ஒரு சில ஓவர்களிலேயே போட்டி தடைபடவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி மெல்போர்ன் மாநில வானிலை அறிக்கை வெளியானதிலிருந்து ரசிகர்கள் மத்தியில் இந்த செய்தியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : டி20 உலகக்கோப்பை : இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனமே இது மட்டும்தான் – ஷேன் வாட்சன் வெளிப்படை
ஏனெனில் இருநாட்டு ரசிகர்கள் மட்டும் இன்றி உலக ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் இந்த போட்டி நடைபெறாமல் புள்ளிகள் பிரித்து அளிக்கப்பட்டால் அது ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



