
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அண்மையில் நடைபெற்று முடிந்த வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் போன்ற டெஸ்ட் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
இந்த தொடரானது வரும் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பெங்களூரு மைதானத்தில் அக்டோபர் 16-ஆம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் அக்டோபர் 24-ஆம் தேதியும், மூன்றாவது டெஸ்ட் போட்டி, மும்பை மைதானத்தில் நவம்பர் 1-ஆம் தேதியும் துவங்க இருப்பதாக ஏற்கனவே அட்டவணை வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரானது துவங்குவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள வேளையில் இந்து தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் வெளியான இந்த அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்கிறார். அதேபோன்று வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது துணை கேப்டன் பதவி அறிவிக்கப்படாத வேளையில் இந்த தொடருக்கான துணைக்கேப்டன் பதவி ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் அப்படியே இடம் பிடித்துள்ளனர்.
ஒரே ஒரு வீரராக யாஷ் தயாள் 16 பேர் கொண்ட அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அதனை தவிர்த்து வேறு எந்த மாற்றமும் கிடையாது. அதன்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களின் முழு பட்டியல் இதோ :
இதையும் படிங்க : இந்தியா ஸ்ட்ராங் டீம் தான்.. ஆனாலும் நான் இந்த வாய்ப்பிற்காக காத்திருக்கேன் – அலெக்ஸ் கேரி சவால்
1) ரோஹித் சர்மா (கேப்டன்), 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) சுப்மன் கில், 4) விராட் கோலி, 5) கே.எல் ராகுல், 6) ரிஷப் பண்ட், 7) சர்பராஸ் கான், 8) துருவ் ஜுரேல், 9) ரவீந்திர ஜடேஜா, 10) ரவிச்சந்திரன் அஷ்வின், 11) குல்தீப் யாதவ், 12) அக்சர் படேல், 13) ஜஸ்ப்ரீத் பும்ரா (து.கேப்டன்), 14) முகமது சிராஜ், 15) ஆகாஷ் தீப்.