IND vs NZ : 3வது ஒன்டே நடைபெறும் இந்தூர் மைதானம் எப்படி? புள்ளி விவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Holkar Indore Cricket Stadium Ground
Advertisement

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தேவையான வீரர்களை கண்டறிந்து தயாராகும் வகையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக உலகின் நம்பர் ஒன் அணியாக விளங்கிய நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரிலும் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. அதனால் சொந்த மண்ணில் தங்களை எப்போதும் வலுவான அணி என்பதை நிரூபித்துள்ள இந்தியா ஜனவரி 24ஆம் தேதியன்று நடைபெறும் சம்பிரதாய கடைசி போட்டியிலும் வென்று 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் இத்தொடரை கைப்பற்ற முயற்சிக்க உள்ளது.

Rohit sharma IND vs NZ

மறுபுறம் கடந்த வாரம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த ஆட்டம் இந்தியாவிடம் செல்லுபடி ஆகாததால் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த நியூசிலாந்து தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை இழந்துள்ளது. கேன் வில்லியம்சன் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் குறைந்தபட்சம் கடைசி போட்டியில் வென்று வைட் வாஷ் தோல்வியைத் தவிர்த்து ஆறுதல் வெற்றியுடன் இத்தொடரை நிறைவு செய்ய அந்த அணி போராட உள்ளது.

- Advertisement -

இந்தூர் மைதானம்:
அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரில் இருக்கும் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறுகிறது. 30,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானத்தில் 2006 முதல் ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இதுவரை இங்கு வரலாற்றில் நடைபெற்றுள்ள 5 போட்டிகளிலும் எதிரணிகளைப் பந்தாடி வெற்றி கண்டுள்ள இந்தியா இம்மைதானத்தை தனது கோட்டையாக வைத்துள்ளது. இருப்பினும் வரலாற்றில் இப்போது தான் முதல் முறையாக நியூசிலாந்தை இங்கு இந்தியா எதிர்கொள்கிறது.

Sehwag

1. இந்த மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக வீரேந்திர சேவாக் (220) ரன்கள்) உள்ளார். குறிப்பாக 2011இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இரட்டை சதமடித்து 219 ரன்கள் விளாசிய அவர் இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த பந்து வீச்சாளராக ஸ்ரீசாந்த் (6 விக்கெட்கள்) உள்ளார். சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலராகவும் அவரே உள்ளார் (6/55, இங்கிலாந்துக்கு எதிராக, 2006).

3. இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்துள்ள அணி : இந்தியா 418/5, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2011. இங்கு வெற்றிகரமாக அதிகபட்ச ஸ்கோர் சேசிங் செய்த அணி : இந்தியா 294/5, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2017. இங்கு வெற்றிகரமாக அதிகபட்ச இலக்கை கட்டுப்படுத்திய அணி : இந்தியா 247/9, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2015

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
ஹோல்கர் மைதானம் வரலாற்றில் பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. போதாக்குறைக்கு இங்கு பக்கவாட்டு பவுண்டரிகள் சராசரியாக 56 மீட்டர் நேரான பவுண்டரிகள் 68 மீட்டர். எனவே இங்குள்ள பிட்ச்சில் இருக்கும் சீரான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை எதிர்கொண்டு நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன்கள் சிறிய பவுண்டரிகளை பயன்படுத்தி பெரிய ரன்களை எளிதாக குவிக்கலாம்.

இருப்பினும் போட்டி செல்ல செல்ல இங்குள்ள பிட்ச் மெதுவாக மாறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதனாலேயே இங்கு ஒருநாள் கிரிக்கெட்டில் 307 ரன்களாக இருக்கும் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 2வது இன்னிங்ஸ்சில் 262 ரன்களாக குறைகிறது. குறிப்பாக கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் இங்கு நடைபெற்ற டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 227 ரன்கள் குவித்த நிலையில் அதை சேசிங் செய்த இந்தியா 178 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

- Advertisement -

எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் நிச்சயமாக இங்கு வெற்றி கிடைக்கலாம். அல்லது சேசிங் செய்தால் பெரிய இலக்கை துரத்த தயாராக இருக்க வேண்டும். அதே சமயம் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இம்மைதானத்தில் பவுலர்கள் சற்று துல்லியமாக செயல்பட்டால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும்.

இதையும் படிங்க: இப்டியா டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடுவிங்க, இந்தியாவின் தோல்விக்கு காரணமான தோனியை திட்டிய சாஸ்திரி – பின்னணியை பகிர்ந்த ஸ்ரீதர்

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நாளன்று இந்தூர் சுற்றிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு எதுவுமில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement