IND vs NZ : 2வது ஒன்டே நடக்கும் ராய்ப்பூர் மைதானம் எப்படி? புள்ளி விவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Raipur Cricket Stadium
- Advertisement -

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளது. அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் சுப்மன் கில் தவிர்த்து பேட்டிங்கில் சொதப்பிய இந்தியா பந்து வீச்சில் ஆரம்பத்தில் அசத்தினாலும் மிடில் ஓவர்களில் மைக்கேல் பிரேஸ்வேலிடம் முரட்டு அடி வாங்கி சந்திக்க வேண்டிய தோல்வியிலிருந்து தப்பி கடைசி ஓவரில் அதிர்ஷ்டத்துடன் வெற்றி பெற்றது.

எனவே பெருமை கொள்வதற்கு ஒன்றுமில்லாத அந்த வெற்றியால் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள இந்தியா 2வது போட்டியில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும் என்ற கூறலாம். குறிப்பாக சமீப காலங்களாகவே ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எடுத்து விட்டால் அத்தோடு வெற்றி உறுதியான மிதப்பில் இந்திய பவுலர்கள் ரன்களை வாரி வழங்குவது பெரிய பின்னடைவை கொடுக்கிறது. எனவே வெற்றிக்கு ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே மன நிலைமையுடன் இந்திய பவுலர்கள் விளையாட வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

ஏனெனில் என்ன தான் கேன் வில்லியம்சன் இல்லை என்றாலும் டாம் லாதம் தலைமையில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் அணி என்பதற்கு எடுத்துக்காட்டாக முதல் போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்து இந்தியாவுக்கும் அதன் சொந்த மண்ணில் சவாலை கொடுக்கும் அனைத்து தகுதிகளையும் தரத்தையும் பெற்றுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் வெற்றியை நூலிழையில் தவற விட்ட அந்த அணி அதே புத்துணர்ச்சியுடன் 2வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய போராட உள்ளது.

ராய்பூர் மைதானம்:
அதனால் சரிசமமான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் இத்தொடரின் 2வது போட்டி ஜனவரி 21ஆம் தேதியன்று மதியம் 1.30 மணிக்கு சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூர் நகரில் இருக்கும் ஷாஹீத் வீர் நாராயண் சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2008இல் தோற்றுவிக்கப்பட்டு 50,000 ரசிகர்கள் அமரக்கூடிய வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இம்மைதானம் இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய மைதானமாக நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இருப்பினும் இந்த மைதானத்தில் இப்போது தான் முதல் முறையாக ஒரு சர்வதேச போட்டி நடைபெற உள்ளது. இதற்கு முன்பு இங்கு ஐபிஎல், சாம்பியன்ஸ் லீக், ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட நிறைய உள்ளூர் தொடர்கள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர் போன்ற ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் விளையாடிய ரோட் சேஃப்டி உலக சீரிஸ் தொடரின் முக்கிய போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றது.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த மைதானம் அளவில் பெரிது என்பதால் பவுண்டர்களின் அளவும் பெரிதாகும். அதனால் என்ன தான் இங்குள்ள பிட்ச் சீரான வேகத்தில் இருப்பதை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ரன்களை குவிப்பது சற்று கடினமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் புதிய பந்தை பயன்படுத்தி பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல சவாலை கொடுப்பார்கள்.

- Advertisement -

அதே போல நேரம் செல்ல செல்ல இங்குள்ள பிட்ச்சின் வேகம் மெதுவாக மாறும் என்பதால் ஸ்பின்னர்களும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். எனவே பேட்ஸ்மேன்கள் இங்கு சற்று நிதானமாக நிலைத்து நின்று பேட்டிங் செய்தால் பெரிய ரன்கள் சேர்க்கலாம். மொத்தத்தில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய அனைத்து துறைகளுக்கும் கைகொடுக்கும் சிறந்த மைதானமாக ராய்ப்பூர் இருக்கும் என்று நம்பலாம்.

மேலும் வரலாற்றில் இங்கு நடைபெற்ற 6 ஐபிஎல் போட்டிகளில் 2 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 4 போட்டிகளில் சேசிங் செய்த அணியும் பெற்றுள்ளன. அதன் அடிப்படையில் சராசரி ஸ்கோர் 144 ஆகும். அத்துடன் இது பகலிரவு போட்டியாக நடைபெறுவதால் டாஸ் வெல்லும் கேப்டன் பனியன் தாக்கத்தை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்கஇதுக்கு மேல நல்ல பிளேயர் வேணும்னா போய் அந்த சேனலை பாருங்க – தேர்வுக்குழு விளாசிய கவாஸ்கர், காரணம் என்ன

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று ராய்ப்பூர் சுற்றிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பு எதுவுமில்லை என்றும் நல்ல தெளிவான வானிலை நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement