IND vs NZ : சாதிக்குமா இளம் படை – முதல் டி20 நடைபெறும் ராஞ்சி மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Ranchi Cricket Stadium Ground
- Advertisement -

2023 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி தரவரிசையில் உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக முன்னேறி சாதனை படைத்துள்ளது. அதைத்தொடர்ந்து 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் அடுத்ததாக நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது. ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கும் இந்திய அணி ஏற்கனவே கடந்த நவம்பரில் நியூஸிலாந்தை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 1 – 0 (3) என்ற கணக்கில் வென்றது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம்.

அதே போல இம்முறையும் பாண்டியா தலைமையில் சுப்மன் கில், சூரியகுமார் யாதவ், உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்களுடன் களமிறங்கி வெற்றிக்காக போராட காத்திருக்கும் இந்திய அணியில் பிரித்வி ஷா, ஜிதேஷ் சர்மா, முகேஷ் குமார் போன்ற மேலும் சில துடிதுடிப்பான இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதனால் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா இத்தொடரிலும் கோப்பையை வெல்ல போராடும் என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

வரலாற்று புள்ளிவிவரங்கள்:
மறுபுறம் வில்லியம்சன் உள்ளிட்ட சில முக்கிய வீரர்கள் இல்லாமல் ஒருநாள் தொடரில் தோற்று நம்பர் ஒன் இடத்தை இழந்த நியூசிலாந்து டி20 தொடரில் மிட்சேல் சாட்னர் தலைமையில் பதிலடி கொடுக்க களமிறங்குகிறது. டேவோன் கான்வே, பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், கிளன் பிலிப்ஸ் என அந்த அணியிலும் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு தரமான வீரர்கள் நிறைந்துள்ளனர். எனவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இத்தொடர் ஜனவரி 27ஆம் தேதி துவங்குகிறது.

டி20 கிரிக்கெட்டில் இந்தியாவும் நியூசிலாந்தும் வரலாற்றில் இதுவரை 24 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இந்தியா 12 போட்டிகளில் வென்றது. நியூசிலாந்து 9 போட்டிகளில் வென்றது. 1 போட்டியில் சமனில் முடிந்தது. 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது. குறிப்பாக இத்தொடர் நடைபெறும் இந்திய மண்ணில் வரலாற்றில் இவ்விரு அணிகள் மோதிய 9 போட்டிகளில் இந்தியா 5 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. நியூசிலாந்து 3 போட்டிகளில் வென்றது. 1 போட்டி சமனில் முடிந்தது.

- Advertisement -

ராஞ்சி மைதானம்:
இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 27ஆம் தேதியன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் இருக்கும் ஜேஎஸ்சிஏ கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இருக்கும் இந்த மைதானத்தில் அவருடைய பெயரில் இருக்கும் பெவிலியன் இந்திய ரசிகர்களின் நினைவுக்கு எப்போதும் வரும். கடந்த 2013இல் தோற்றுவிக்கப்பட்டு 50,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 2016 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

தோனி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது போல் அவரது சொந்த ஊர் மட்டும் கைவிட்டு விடுமா என்ற வகையில் இங்கு இதுவரை நடைபெற்ற 3 டி20 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் இந்தியாவின் கோட்டையாக திகழும் இம்மைதானத்தில் கடைசியாக கடந்த 2021இல் இதே நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

இந்த மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக ரோஹித் சர்மாவும் (109 ரன்கள்) அதிக விக்கெட் எடுத்த வீரர்களாக அஷ்வின் மற்றும் பும்ரா (தலா 4) ஆகியோர் உள்ளனர். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி : இந்தியா 196/6, இலங்கைக்கு எதிராக, 2016. வெற்றிகரமாக அதிகபட்ச இலக்கை சேசிங் செய்த அணி : இந்தியா 155/3, நியூசிலாந்துக்கு எதிராக, 2021

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த மைதானம் சமீப காலங்களில் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாகவும் பவுலர்களுக்கு சாதகமாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக இங்குள்ள பிட்ச் காய்ந்து மெதுவாக இருப்பதை பயன்படுத்தி ஸ்பின்னர்கள் மற்றும் மிதவேகப்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அதனாலேயே கடைசியாக இங்கு நடைபெற்ற 2 டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 118, 153 ரன்கள் மட்டுமே எடுத்தன.

- Advertisement -

எனவே அதை சமாளிக்க நிலைத்து நிற்க வேண்டிய பேட்ஸ்மென்கள் நன்கு செட்டிலான பின் அளவில் சிறிய பவுண்டரி எல்லைகளை பயன்படுத்தி எளிதாக ரன்களை குவிக்கலாம். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 155 ஆகும். மேலும் இங்கு வரலாற்றில் 3இல் 2 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளது என்பதாலும் பனியின் தாக்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாலும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்க: கபில் தேவ், பும்ரா ஆகியோரை மிஞ்சிய முகமது சிராஜ் – தோனி போல ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் நாளன்று ராஞ்சி நகரில் மழைக்கான வாய்ப்பில்லை என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement