IND vs IRE : போராடிய அயர்லாந்து, கடைசி ஓவரில் மிரட்டிய உம்ரான் மாலிக், இந்தியா த்ரில் வைட்வாஷ் வெற்றி பெற்றது எப்படி – முழுவிவரம்

IND vs IRE Umran Malik
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா இங்கிலாந்து அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. ஜூன் 26இல் அயர்லாந்து தலைநகர் டப்லின் நகரில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூன் 28இல் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு துவங்கியது.

அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து காயமடைந்த ருதுராஜ்க்கு பதில் நீண்ட நாட்களுக்குப் பின்பு வாய்ப்பு பெற்ற சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிசான் ஓபனிங் ஜோடியாக களமிறங்கினார். அதில் இஷான் கிசான் 3 (5) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த தீபக் ஹூடாவுடன் கைகோர்த்த சஞ்சு சாம்சன் நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்க்க முயற்சித்தார்.

- Advertisement -

மிரட்டல் பேட்டிங்:
பவர்பிளே பட்டாசாக பவுண்டரிகளை பறக்கவிட்ட இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல அயர்லாந்து பவுலர்களுக்கு கருணை காட்டாமல் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து ரன் மழை பொழிய துவங்கியது. ஒரு கட்டத்தில் இருவருமே போட்டி போட்டுக்கொண்டு பவுண்டரிகளை பறக்க விட்டதால் ஓவருக்கு 10 ரன்களை எளிதாக குவிக்கத் தொடங்கிய இந்தியாவுக்கு 3-வது ஓவரில் ஜோடி சேர்ந்த இவர்கள் 17 ஓவர்கள் வரை 176 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக சாதனை படைத்த பின் ஒருவழியாக பிரிந்தனர். அதில் சஞ்சு சாம்சன் 9 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 77 (42) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 15 (5) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்த ஓவரிலேயே 9 பவுண்டரி 6 சிக்சருடன் தனது முதல் டி20 சதத்தை அடித்த தீபக் ஹூடா 104 (57) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ஹர்திக் பாண்டியா 13* (9) ரன்கள் எடுக்க எதிர்ப்புறம் வந்த தினேஷ் கார்த்திக், அக்சர் படேல், ஹர்ஷல் படேல் ஆகியோர் அடுத்தடுத்து டக் ஏமாற்றினாலும் 20 ஓவர்களில் இந்தியா 225/7 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக மார்க் அடைர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து 226 என்ற கடினமான இலக்கை துரத்திய அயர்லாந்துக்கு கேப்டன் பால்பிரின் – பால் ஸ்டெர்லிங் ஜோடி 72 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த மிரட்டலான தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

போராடிய அயர்லாந்து:
அதில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் ஸ்டெர்லிங் 40 (18) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கெரத் டிலானியை 0 (4) ரன்களில் கேப்டன் பாண்டியா ரன் அவுட் செய்து அனுப்பி வைத்தார். இருப்பினும் மறுபுறம் தனது பங்கிற்கு 3 பவுண்டரி 7 மெகா சிக்சர்களை பறக்கவிட்ட கேப்டன் பால்பிரின் 60 (37) ரன்கள் எடுத்து வெற்றிக்காகப் போராடி ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் லார்க்கன் டூக்கர் 5 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

முக்கிய பேட்ஸ்மேன்கள் நல்ல ரன்கள் எடுத்ததால் தொடர்ச்சியாக ரன்ரேட்டை நெருங்கி கொண்டே வந்து அயர்லாந்துக்கு கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 52 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது 5 பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹென்றி டெக்டர் 39 (28) ரன்கள் எடுத்து போராடி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார். அவருக்கு பின் களமிறங்கிய ஜார்ஜ் டாக்ரெல் அதிரடியான சிக்ஸர்களை பறக்க விட்டதால் போட்டியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டு அயர்லாந்து வெற்றியை நெருங்கியது.

- Advertisement -

அந்த பரபரப்புக்கு மத்தியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வீசிய இளம் வீரர் உம்ரான் மாலிக் முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை என்றாலும் 2-வது பந்தில் நோ-பால் வீசினார். அதைப் பயன்படுத்திய அயர்லாந்தின் மார்க் அடைர் 3, 4 ஆகிய பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்கவிட்டார். அதனால் கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட பொழுது சுதாரித்த உம்ரான் மாலிக் 1, 1 பைஸ், 1 என 3 ரன்கள் மட்டுமே கொடுத்து இந்தியாவுக்கு 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக்கொடுத்தார். அதனால் 20 ஓவரில் 221/5 ரன்களை எடுத்து சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக முதல் முறையாக ஒரு சர்வதேச போட்டியில் வெல்வதற்காக போராடிய அயர்லாந்தின் கடுமையான போராட்டம் வீணானது.

வென்றது எப்படி:
அந்த அணிக்கு கடைசி நேரத்தில் ஜார்ஜ் டாக்ரெல் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 34* (16) ரன்களும் மார்க் அடைர் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 23* (12) ரன்கள் எடுத்து போராடிய போராட்டம் வெற்றியை கொடுக்கவில்லை. அதற்கு காரணம் ஆரம்ப முதலே ரன்களை வாரி வழங்கிய இந்திய பவுலர்கள் கடைசி 5 ஓவர்களில் சற்று சுதாரித்து வள்ளலைப் போல் அல்லாமல் ஓரளவு மட்டுமே ரன்களைக் கொடுத்து கட்டுப்படுத்தினார்.

குறிப்பாக 18-வது ஓவரை வீசிய நட்சத்திர அனுபவ பவுலர் புவனேஸ்வர் குமார் வெறும் 7 ரன்கள் மட்டும் கொடுத்தது போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதை கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசிய உம்ரான் மாலிக் வெற்றியாக மாற்றிக் காட்டினார். மொத்தத்தில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் ஹர்திக் பாண்டியா தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களை வைத்து வென்றுள்ள இந்தியா 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

Advertisement