IND vs IRE : போட்டி நடக்கும் டப்ளின் மைதானம் எப்படி? வரலாற்று சுவடுகள் – பிட்ச் ரிப்போர்ட் இதோ

Dublin Malahide Cricket Ground
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடருக்குப் பின் தனது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்ட ரிஷப் பண்ட் தலைமையிலான இந்தியா முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்தாலும் அதன்பின் கொதித்தெழுந்து அடுத்த 2 போட்டிகளில் வென்று 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. அந்த தொடருக்குப் பின் கத்துக்குட்டியான அயர்லாந்துக்கு பறந்துள்ள இந்திய அணியினர் அங்கு அந்த அணிக்கு எதிராக ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கின்றனர்.

கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஜூலை 1இல் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதால் சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் ஆல்-ரவுண்டராக அசத்தி அனுபவமில்லாத கேப்டனாக அணி வீரர்களை அற்புதமாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் முதல் முறையாக இந்தியாவை வழி நடத்துகிறார். அவருடன் தினேஷ் கார்த்திக், புவனேஸ்வர் குமார் போன்ற சமீபத்திய தென் ஆப்ரிக்க தொடரில் அசத்திய வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement -

வெல்லுமா இளமை:
அதுபோக ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றமடைந்த ராகுல் திரிப்பாதி முதல் முறையாக வாய்ப்பை பெற்றுள்ளார். அவருடன் நீண்ட நாட்களுக்கு பின் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். மேலும் தென் ஆப்ரிக்க தொடரில் களமிறங்கும் வாய்ப்பை பெறாத உம்ரான் மாலிக், அர்ஷிதீப் சிங் போன்றவர்களுக்கும் இந்த தொடரில் 11 பேர் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ஹர்திக் பாண்டியா தலைமையில் பயிற்சியாளராக ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மன் மேற்பார்வையில் இளமையும் அனுபவமும் கொண்ட இந்திய அணி கத்துக்குட்டியான அயர்லாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

டப்ளின் சுவடுகள்:
இந்த தொடரின் 2 போட்டிகளும் ஜூன் 26, 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நகரில் உள்ள மாலஹைட் நகரில் இருக்கும் வில்லேஜ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 4 மணிக்கும் இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கும் நடைபெறவுள்ளது. இந்த 2 நாட்களிலும் மழைக்கான வாய்ப்பு இருந்தாலும் போட்டி முழுமையாக நடைபெறும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த சமயத்தில் டப்ளின் மைதானத்தை பற்றி பார்ப்போம்.

1. அழகான அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளின் நகரில் இருக்கும் இந்த மைதானம் சென்னை சேப்பாக்கத்தை போல சற்று கடலோரத்தில் அமைந்துள்ளது. வானை மறைக்கும் பெவிலியன் அல்லாமல் ரசிகர்கள் அமரும் வகையில் சாதாரண கட்டமைப்புடன் பெரும்பாலும் திறந்த வெளியாக காணப்படும் இம்மைதானத்தில் 11,500 ரசிகர்கள் ஒன்றாக அமர்ந்து இயற்கை காட்சிகளுடன் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பது சொர்க்கமாகும்.

- Advertisement -

2. கடந்த 2015 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வரும் இந்த மைதானத்தில் இதுவரை வரலாற்றில் மொத்தம் 19 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 6 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன, 8 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன, 2 போட்டிகள் ரத்து செய்யப்பட்டன, 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டன.

இந்திய செயல்பாடு:
இந்த மைதானத்தில் முதலும் கடைசியுமாக கடந்த 2018இல் விராட் கோலி தலைமையிலான இந்தியா இப்போது போலவே அயர்லாந்தை 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்டு 2 – 0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

- Advertisement -

1. அதில் முதலில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா 97, ஷிகர் தவான் 74 ரன்கள் எடுத்ததால் 208/5 ரன்களைக் குவித்த இந்தியா பின்னர் அயர்லாந்தை 132/9 ரன்களுக்கு சுருட்டி 76 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 4 விக்கெட்டுகள் எடுத்த குல்தீப் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

2. 2-வது போட்டியில் ஒருபடி மேலே சென்ற இந்தியா கேஎல் ராகுல் 70, சுரேஷ் ரெய்னா 69 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் 213/4 ரன்கள் குவித்து பின்னர் அயர்லாந்தை 70 ரன்களில் சுருட்டி 143 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. 70 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை வென்றார். சஹால் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

பிட்ச் ரிப்போர்ட்:
இந்த மைதானம் வரலாற்றில் பேட்டிங் பவுலிங் என இரண்டுக்குமே சரிசமமான சாதகமாக இருந்து வருவதால் திறமையை வெளிப்படுத்தும் அனைவருமே இந்த மைதானத்தில் சிறப்பாக செயல்பட முடியும். இருப்பினும் இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 159 ரன்கள் என்பதாலும் இங்கு சேசிங் செய்த அணிகள் அதிகம் வென்றுள்ளதாலும் டாஸ் வெல்லும் கேப்டன்கள் முதலில் பந்து வீச தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்க : IND vs IRE : அயர்லாந்துக்கும் போயும் விடாத அச்சுறுத்தல் – தொடர் முழுதாக நடக்குமா? வெளியான வெதர் ரிப்போர்ட் இதோ

இந்த மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர்: 252/3, ஸ்காட்லாந்து, நெதர்லாந்துக்கு எதிராக, 2019
குறைந்தபட்ச ஸ்கோர்: 70/10, அயர்லாந்து இந்தியாவுக்கு எதிராக, 2018
வெற்றிகரமாக சேசிங் செய்யப்பட்ட அதிகபட்ச இலக்கு: 194/6, அயர்லாந்து ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2019
வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்ட குறைந்த பட்ச இலக்கு: 129/8, ஹாங் காங்க், அயர்லாந்துக்கு எதிராக, 2015

Advertisement