
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நாளை ஜூன் 20-ஆம் தேதி லீட்ஸ் நகரில் துவங்க இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு அங்கமாக இருப்பதினால் இரு அணியின் வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரானது இங்கிலாந்து மண்ணில் நடைபெற இருப்பதினால் இந்த தொடரை இந்திய ரசிகர்கள் எந்த சேனலில் பார்க்கலாம்? போட்டிகள் எந்த நேரத்தில் நடைபெறும்? என்பது குறித்த சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் இங்கிலாந்தில் நடைபெறும் இந்த முதல் டெஸ்ட் போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு துவங்கும் என்றும் அதனை சோனி 1 தொலைக்காட்சியில் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த தொடருக்கான ஒளிபரப்பு உரிமத்தை சோனி குழும நிறுவனமே கைப்பற்றியதால் சோனி 1 சேனலில் இந்த தொடரை காணலாம்.
அதே வேளையில் வரலாற்றிலேயே முதல் முறையாக வெளிநாட்டில் நடக்கும் இந்த டெஸ்ட் தொடரை ஓ.டி.டி தளத்தில் ஜியோ ஹாட்ஸ்டார் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இருக்கிறது. இதன் காரணமாக ஆன்லைன் வாயிலாக இந்த தொடரை காண விரும்புவோர் ஜியோ ஹாட் ஸ்டார் மூலம் கண்டு களிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் நட்சத்திர வீரரான விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த வேளையில் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்கள் விளையாட இருக்கும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : சச்சின், தோனி, விராட், ரோஹித் முடிஞ்ச கதை.. இந்திய அணியால் இதை செய்ய முடியும்ன்னு பாருங்க.. கபில் தேவ்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் 2 பதிப்புகளில் இறுதிப்போட்டி வரை சென்று தோல்வியடைந்த இந்திய அணி கடைசியாக நடைபெற்று முடிந்த தொடரில் இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. எனவே இம்முறை நடைபெறவிருக்கும் 2025-27 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் தங்களது வெற்றிக்காக தீவிர முனைப்பு காட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.