இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் ஜூலை 31ஆம் தேதி துவங்கியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா சுமாராக பேட்டிங் செய்து 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் ஆகியோர் பஸ்பாஸ் ஸ்டைலில் மீண்டும் இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கினார்கள். டி20 போல விளையாடிய அந்த ஜோடி 77 பந்துகளில் 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மிரட்டியது. குறிப்பாக பென் டக்கெட் ரிவர்ஸ் ஸ்கூப் ஷாட் வாயிலாக சிக்ஸரை அடித்து அசத்தினார்.
ஆகாஷ் தீப் அசத்தல்:
அப்போது “என்னை உங்களால் இங்கே அவுட்டாக்க முடியாது” என்று அவர் ஆகாஷ் தீப்பிடம் சவால் விடுத்தார். அதை சிரிப்புடன் ஏற்றுக் கொண்ட ஆகாஷ் தீப் தொடர்ந்து கட்டுகோப்புடன் பந்து வீசினார். அப்போது 13வது ஓவரின் 5வது பந்தை மீண்டும் ரிவர்ஸ் ஸ்கூப் அடிக்க முயற்சித்த டக்கெட் 43 (38) ரன்களில் சிக்ஸர் அடிக்க எட்ஜ் கொடுத்து அவுட்டானார்.
அந்த வகையில் டக்கெட்டை அவருடைய வழியிலேயே காலி செய்த ஆகாஷ் தீப் பெவிலியன் நோக்கி நடையைக் கட்டிய அவருடைய தோளில் நண்பனை போல் கையைப் போட்டு தக்க பதிலடி கொடுத்து அனுப்பி வைத்தார். எதிர்புறம் மிரட்டிய கிராவ்லி 64 (57) ரன்களில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ஓலி போப் 22 ரன்களில் சிராஜ் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் ஜோ ரூட் நங்கூரமாக விளையாடி சவாலைக் கொடுக்கத் தொடங்கினார்.
கோபப்பட்ட ரூட்:
அப்போது 22வது ஓவரின் 5வது பந்தை வீசிய பிரசித் கிருஷ்ணா ஏதோ சில வார்த்தைகளை ஜோ ரூட்டிடம் சொன்னதாக தெரிகிறது. அதனால் கடுப்பான ரூட் அடுத்த பந்திலேயே பவுண்டரியை பறக்க விட்டு “என்கிட்ட மோதாதே” என்ற வகையில் கிருஷ்ணாவிடம் கோபமாக பேசினார். பொதுவாகவே அமைதியாக இருக்கக்கூடிய ரூட் இன்று பொறுமையிழந்து அவரிடம் மிகவும் கோபமாக பேசினார்.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கபில் தேவ் இவர்தான்.. அனுபவ வீரருக்கு – சேத்தன் சர்மா பாராட்டு
அதனால் நடுவரும் மற்ற இந்திய வீரர்களும் உள்ளே புகுந்து வாக்குவாதத்தை நிறுத்தினார்கள். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் ரூட் 29 ரன்களில் அவுட்டாக்கிய சிராஜ் அடுத்து வந்த ஜேக்கப் பேத்தலையும் 6 ரன்னில் அவுட்டாக்கினார். அதனால் இப்பதிவிடும் போது இங்கிலாந்து 200/5 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அந்த அணியை சுருட்ட இந்திய அணி முயற்சித்து வருகிறது.



