IND vs ENG : அவர் கூட ஒருத்தர் நின்னு இருந்தா கூட ஜெயிச்சிருக்கலாம் – இறுதிப்போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி

Suryakumar yadhav
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பதிவு செய்த இந்தியா 2 – 0* என்ற கணக்கில் ஏற்கனவே தொடரை கைப்பற்றிது. அந்த நிலைமையில் இத்தொடரின் சம்பிரதாய 3-வது போட்டி ஜூலை 10-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு நாட்டிங்காமில் துவங்கியது. அதில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஷ்ரேயஸ் ஐயர், உம்ரான் மாலிக், ரவி பிஸ்னோய், ஆவேஷ் கான் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

அதன்பின் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜோஸ் பட்லர் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 18 (9) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் 1 பவுண்டரி 2 சிக்சருடன் ஜேசன் ராய் 27 (26) ரன்களிலும் அவுட்டானார். அப்போது வந்த பிலிப் சால்ட் 8 (6) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

இங்கிலாந்து 215:
அதனால் 84/3 என தடுமாறிய இங்கிலாந்தை 4-வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் அதிரடியாக பார்ட்னர்ஷிப் அமைத்த டேவிட் மாலன் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் ஆகியோர் மீட்டெடுத்தார்கள். அதில் 3-வது இடத்தில் களமிறங்கி இந்திய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு 6 பவுண்டரி 5 சிக்சர்களை பறக்க விட்ட டேவிட் மாலன் 77 (39) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த சமயத்தில் வந்த மொயின் அலி கோல்டன் டக் அவுட்டானாலும் அவருக்குப்பின் களமிறங்கிய ஹாரி ப்ரூக் 19 (9) ரன்களும் கிறிஸ் ஜோர்டான் 11 (3) ரன்களும் எடுத்து தங்களது வேலையை கச்சிதமாக செய்தனர். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் 4 சிக்சருடன் 42* (29) ரன்கள் எடுத்த லிவிங்ஸ்டன் சூப்பர் பினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் இங்கிலாந்து 215/7 ரன்கள் எடுத்தது.

சுமாராக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவி பிஸ்னோய் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 216 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் 1 (5) ரன்னில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய விராட் கோலி பவுண்டரி மற்றும் சிக்ஸரை பறக்கவிட்டு 3-வது பந்தில் 11 (6) ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றினார். அடுத்த சில ஓவர்களில் அதிரடி காட்ட முயன்ற கேப்டன் ரோகித் சர்மாவும் 11 (6) ரன்களில் நடையை கட்டினார்.

- Advertisement -

போராடிய சூரியகுமார்:
அதனால் 31/3 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நிதானமாக பேட்டிங் செய்தனர். அதில் ஒருபுறம் ஸ்ரேயாஸ் அய்யர் நிலைத்து நிற்க மறுபுறம் அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவ் ரன்ரேட்டை கட்டுக்குள் வைப்பதற்காக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்டு அரைசதம் கடந்து வெற்றிக்காக போராடினார். 5-வது ஓவரில் இணைந்த இவர்கள் 15-வது ஓவர் வரை இங்கிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 4-வது விக்கெட்டுக்கு 119 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை காப்பாற்றிய போது கடைசிவரை மெதுவாகவே பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் அய்யர் 28 (23) ரன்களில் அவுட்டாகி முக்கிய நேரத்தில் நடையை கட்டினார்.

அதனால் கடைசி 5 ஓவரில் வெற்றிக்கு 66 ரன்கள் தேவைப்பட்ட போது சூரியகுமார் யாதவ் அதிரடியாக ரன்களை சேர்த்தார். ஆனால் அவருக்கு கை கொடுக்க வேண்டிய தினேஷ் கார்த்திக் 6 (7) ரன்களிலும் ரவீந்திர ஜடேஜா 7 (4) ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் அவுட்டாகி அதிர்ச்சிக் கொடுத்தனர். ஆனாலும் மறுபுறம் தனி ஒருவனாக போராடிய சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை அடித்து அசத்தியதால் வெற்றியை நெருங்கிய இந்தியாவுக்கு கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

போராட்டம் வீண்:
அப்போது மொய்ன் அலி வீசிய 19-வது ஓவரில் 4, 6, 4 என 16 ரன்களை தெறிக்க விட்டு முழு மூச்சை கொடுத்துப் போராடிய சூர்யகுமார் யாதவ் 14 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 117 (55) ரன்கள் குவித்த போது 5-வது பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதோடு கதையும் முடிந்தது போல் அடுத்ததாக பேட்ஸ்மேன்கள் இல்லாததால் 20 ஓவர்களில் இந்தியா 198/9 ரன்களை மட்டுமே எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

இப்போட்டியில் ஏற்கனவே தொடரை வென்று விட்டதால் சோதனை முயற்சியாக இளம் பவுலர்களுக்கு கேப்டன் ரோகித் சர்மா வாய்ப்பளித்தார். அதில் பிஷ்னோய் மற்றும் ஹர்ஷல் படேல் தவிர எஞ்சிய 3 பவுலர்கள் மோசமாக பந்துவீசி 10க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கியது தோல்விக்கு முதல் படியாக அமைந்தது. அடுத்ததாக 216 இலக்கைத் துரத்தும் போது ரோஹித் சர்மா, பண்ட், விராட் கோலி என 3 பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானது 2-வது காரணமாக அமைந்தது.

இருப்பினும் அதை அற்புதமாக பேட்டிங் செய்து காப்பாற்றிய சூரியகுமார் யாதவின் போராட்டம் வீணாகும் வகையில் தினேஷ் கார்த்திக், ஜடேஜா ஆகியோர் பினிஷர்களாக செயல்படாமல் தோல்விக்கு காரணமாக அமைந்தனர். ஆனாலும் சமீபத்திய டெஸ்ட் போட்டியில் வரலாற்று தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் மண்ணைக் கவ்வ வைத்துள்ள இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை வென்று பதிலடி கொடுத்துள்ளது பாராட்டுக்குரிய அம்சமாகும்.

Advertisement