IND vs ENG முதல் டி20 : வெல்லப்போவது யார், போட்டி நடக்கும் ரோஸ் பௌல் மைதானம் எப்படி, புள்ளிவிவரம் – பிட்ச், வெதர் ரிப்போர்ட் இதோ

IND vs ENG Rose Bowl Stadium Southampton Ground
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 7-ஆம் தேதியன்று துவங்குகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கிய 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகித்த போதிலும் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் முதல் 3 நாட்களில் அபாரமாக செயல்பட்ட போதிலும் 378 ரன்களை கட்டுப்படுத்த முடியாமல் கடைசி 2 நாட்களில் சொதப்பிய இந்தியா வரலாற்று தோல்வியை சந்தித்தது.

அதனால் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் மட்டுமே செய்ய முடிந்த இந்தியா 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டது. அப்போட்டியில் கடைசி நேரத்தில் கேப்டன் ரோகித் சர்மா விலகியதால் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத பும்ரா வழிநடத்திய இந்தியாவை புதிய கேப்டனாக பொறுப்பேற்ற பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து சரமாரியாக அடித்து தோல்வியை பரிசளித்தது. எனவே இந்த டி20 தொடருக்கு குணமடைந்து ரோகித் சர்மா திரும்பியுள்ள தலைமையில் இங்கிலாந்துக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

வெல்லப்போவது யார்:
இங்கிலாந்து: இதில் உலக கோப்பையை வென்று இங்கிலாந்தை அதிரடி படையாக மாற்றிய கேப்டன் இயன் மோர்கன் சுமாரான பாரம் மற்றும் காயத்தால் கடந்த வாரம் ஓய்வு பெற்றார். இருப்பினும் அது இங்கிலாந்துக்கு கொஞ்சமும் பின்னடைவை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் ஐபிஎல் 2022 தொடரில் சரவெடியாக பேட்டிங் செய்து ஆரஞ்சு தொப்பியை வென்ற மற்றொரு நட்சத்திரம் ஜோஸ் பட்லர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் சமீபத்தில் நெதர்லாந்தை வதம் செய்த இங்கிலாந்து 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பெற்றி புத்துணர்ச்சியுடன் காணப்படுகிறது. எனவே சொந்த மண்ணில் எப்போதும் வலுவான அணியாக காணப்படும் இங்கிலாந்து அவரது தலைமையில் ஜேசன் ராய், மொய்ன் அலி போன்ற அதிரடி வீரர்களுடன் இந்த டி20 தொடரிலும் இந்தியாவை சாய்க்க தயாராகியுள்ளது.

- Advertisement -

இந்தியா: ஆனால் இம்முறை அதை சமாளிக்க ரோகித் சர்மா தலைமை தாங்கும் இந்திய அணியில் தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், தீபக் ஹூடா, இஷான் கிசான் என சமீபத்திய தென் ஆப்பிரிக்க மற்றும் அயர்லாந்து தொடரில் மிரட்டிய அனுபவம் கலந்த இளம் வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் இத்தொடருக்காக பிரத்யேகமாக தினேஷ் கார்த்திக் தலைமையில் பங்கேற்ற 2 கவுண்டி அணிகளுக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. எனவே அந்த புத்துணர்ச்சியுடன் டெஸ்ட் போட்டியில் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை மண்ணை கவ்வ வைத்து கோப்பையை வென்று பழிதீர்க்க இந்தியா போராட உள்ளது.

- Advertisement -

ரோஸ் பௌல்:
ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இந்த டி20 தொடரின் தொடரின் முதல் போட்டி ஜூலை 7-ஆம் தேதியன்று இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு இங்கிலாந்தின் சௌதம்ட்டன் நகரில் இருக்கும் ரோஸ் பவுல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த 2001இல் தோற்றுவிக்கப்பட்டு 20000 ரசிகர்கள் கண்டு களிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தில் கடந்த 2005 முதல் சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்று வருகின்றது.

1. இங்கு வரலாற்றில் மொத்தம் 9 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 5 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளன. 4 போட்டிகளில் சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன.

- Advertisement -

2. இம்மைதானத்தில் பங்கேற்ற 9 போட்டிகளில் 6 வெற்றிகளை இங்கிலாந்து பதிவு செய்துள்ளது. அப்படிப்பட்ட நிலைமையில் முதல் முறையாக இங்கு இங்கிலாந்தை தற்போது இந்தியா சந்திப்பதால் கவனத்துடன் விளையாட வேண்டியுள்ளது.

3. இம்மைதானத்தில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் : ஆஸ்திரேலியா – 248/6, இங்கிலாந்துக்கு எதிராக, 2013. இங்கு பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச ஸ்கோர் : ஆஸ்திரேலியா – 79 ஆல்-அவுட், இங்கிலாந்துக்கு எதிராக, 2005

வெதர் ரிப்போர்ட்:
டெஸ்ட் போட்டி நடந்த பர்மிங்காம் நகரை போலல்லாமல் இப்போட்டி நடைபெறும் சவுதம்டன் நகரில் போட்டி நாளன்று மழைக்கான வாய்ப்பு வெறும் 2% என்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும். இருப்பினும் மேக மூட்டத்துடன் கூடிய குளிரான காலநிலை இங்கு நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் ரோஸ் பௌல் மைதானம் ஃப்ளாட்டாக இருப்பதால் வரலாற்றில் பெரும்பாலும் பேட்டிங்க்கு சாதகமாகவே இருந்து வருகிறது. இருப்பினும் குளிரான சூழ்நிலையை பயன்படுத்தி புதிய ஸ்விங் செய்யும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நிச்சயமாக விக்கெட்டுகள் கிடைக்கும். எனவே இப்போட்டியில் ஆரம்பகட்ட பவர்பிளே ஓவர்களில் நிதானத்தை வெளிப்படுத்தி திறமையை காட்டும் பேட்ஸ்மேன்கள் ரன் மழை பொழியலாம்.

அதேபோல் மிடில் ஓவர்களில் சுழல் பந்துவீச்சாளர்கள் கணிசமான விக்கெட்டுகளை எடுப்பார்கள். இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்சில் 161 ஆகும். இங்கு இதற்கு முன்பு முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிகம் வெற்றி பெற்றுள்ளதால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து பெரிய ரன்களை குவித்தால் வெற்றி நிச்சயமென கருதலாம்.

Advertisement