இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக தற்போது இந்திய வீரர்கள் அனைவரும் சென்னை வந்தடைந்து தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே பாகிஸ்தான் சென்று அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி வங்கதேச அணி அசத்தியுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள டிவிஸ்ட் :
அதே வெற்றி உத்வேகத்துடன் இந்திய அணியும் எதிர்கொள்ள உள்ளது. இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த தொடரானது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த தொடரில் இந்திய அணியின் கையே ஓங்கியுள்ளது என்று கூறலாம்.
இந்நிலையில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கும் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் பயன்படுத்தப்படும் பிட்ச் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வகையில் வங்கதேச அணி அதன் சொந்த மண்ணில் கருப்பு நிற மண் கொண்ட பிட்சில்தான் அதிகம் விளையாடி உள்ளது.
எனவே இந்திய அணியும் கருப்பு நிற மண் கொண்ட பிட்சில்தான் தற்போது பயிற்சி செய்து வருகிறது. ஆனால் போட்டியின் போது சிகப்பு நிற மண் கொண்ட பிட்சை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக அமையும். ஆனாலும் இங்குள்ள சூழ்நிலையை புரிந்து கொண்டு சேப்பாக்கம் போன்ற மந்தமான பிட்சில் வங்கதேச வீரர்கள் பேட்டிங் செய்ய சவாலை எதிர்கொள்வார்கள்.
அதே வேளையில் இந்திய அணி தங்கள் சொந்த மண்ணில் மிக வலிமையான அணி என்பதனால் எளிதில் ரன்களை குவிக்க வாய்ப்பு இருக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க பல போட்டிகள் நடைபெற்றுள்ள வேளையில் இந்த போட்டியும் ஒரு மிகச்சிறந்த போட்டியாக மாற வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : சாரி இந்தியர்களே.. விராட் கோலின்னு நினைப்பா? ஸ்ரேயாஸ் ஐயர் இதுக்கு தகுதியே இல்லாதவர்.. பசிட் அலி விளாசல்
அதேபோன்று இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இது இந்திய அணியின் 179-ஆவது டெஸ்ட் வெற்றியாக அமையும். இந்த போட்டிக்காக தற்போது ஒரு வார கால பயிற்சியில் ஈடுபட்டுள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி காலை 9.30 மணி முதல் 3 மணி வரை தொடர்ச்சியாக பயிற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.



