இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் கடைசியாக விளையாடிய தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் பெரிய ரன்கள் குவிக்கவில்லை. அந்த சூழ்நிலையில் இங்கிலாந்து தொடரில் காயமடைந்து வெளியேறிய அவர் மீண்டும் குணமடைந்த போது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுமாறு பிசிசிஐ அறிவுறுத்தியது. ஆனால் அதை செய்யாததால் கோபமடைந்த பிசிசிஐ அவரை இந்திய அணியின் மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து அதிரடியாக நீக்கியது.
அதன் பின் 2024 ஐபிஎல் கோப்பையை வென்ற அவரை புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்குள் கொண்டு வந்தார். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறிய ஸ்ரேயாஸ் ஐயரை அடுத்து நடைபெறும் வங்கதேச தொடரில் தேர்வுக்குழு கழற்றி விட்டுள்ளது. அதனால் மீண்டும் கம்பேக் கொடுக்க 2024 துலீப் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் பெரிய ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சொதப்பும் ஸ்ரேயாஸ் ஐயர்:
இருப்பினும் முதல் ரவுண்டில் அதிரடியாக விளையாடிய அரை சதமடித்த அவர் 2வது ரவுண்டில் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு களமிறங்கினார். ஆனால் அந்த வாய்ப்பில் 7 பந்துகளில் டக் அவுட்டான ஷ்ரேயாஸ் ஐயர் ஏமாற்றத்தைக் கொடுத்ததால் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர். இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் துலீப் கோப்பை போன்ற உள்ளூர் டெஸ்ட் தொடரில் கூட விளையாடுவதற்கு தகுதியற்றவர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி விமர்சித்துள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு கிரிக்கெட்டராக ஸ்ரேயாஸ் அவுட்டான விதம் எனக்கு சோகத்தை கொடுத்தது. நீங்கள் முன்னே அவுட்டானால் உங்களுக்கு போட்டியில் கவனமில்லை என்று அர்த்தம். கடந்த உலகக் கோப்பையில் 2 சதங்கள் அடித்து ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனான அவர் இங்கே 100 – 200 ரன்கள் அடித்திருக்க வேண்டும்”
விராட் கோலின்னு நினைப்பா:
“புஜாரா, ரஹானே விளையாடாததாலேயே அதிர்ஷ்டத்தால் துலீப் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுகிறார். உண்மையில் அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிப்பதற்கான பசி இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் அவர் பவுண்டரிகளை மட்டுமே அடிக்கும் பசியை கொண்டுள்ளார். ஒருவேளை உலகக்கோப்பையில் 2 சதங்கள் அடித்ததற்காக அவர் தன்னை விராட் கோலியாக நினைத்தால் அது நடக்காது”
இதையும் படிங்க: எங்ககிட்ட இது இருக்கு.. மறுபடியும் சொல்றேன் இந்திய தொடரில் 12 வருட சாதனையை உடைப்போம்.. சான்டோ உறுதி
“ஸ்ரேயாஸ் ஐயரை விரும்பும் இந்தியர்கள் என்னை மன்னிக்கவும். நான் இந்திய தேர்வாளராக இருந்தால் அவரை துலீப் கோப்பையில் தேர்ந்தெடுத்திருக்க மாட்டேன். ஏனெனில் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கவில்லை” என்று கூறினார். முன்னதாக ஸ்ரேயாஸ் தலைமையில் இந்தியா டி அணி முதல் ரவுண்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.



