இந்தியா – வங்கதேசம் 2வது டெஸ்ட் நடைபெறும் கான்பூர் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் ரிப்போர்ட்

Kanpur
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசத்தை 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அதனால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை தோற்கடித்து 1 – 0* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெறுகிறது. அந்த போட்டியில் வெற்றியை பெற்று குறைந்தபட்சம் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்க்க வங்கதேசம் போராட உள்ளது. மறுபுறம் வலுவான இந்தியா அந்தப் போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தி 2 – 0 என்ற கணக்கில் கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது.

- Advertisement -

கான்பூர் மைதானம்:

அதனால் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள அப்போட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் இருக்கும் கிரீன் பார்க் கிரிக்கெட் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு துவங்குகிறது. கடந்த 1952இல் தோற்றுவிக்கப்பட்ட க்ரீன் பார்க் மைதானம் தற்போது 45000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை மொத்தம் 23 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

அந்த 23 போட்டிகளிலும் விளையாடியுள்ள இந்தியா 7 வெற்றி 3 தோல்விகளை பதிவு செய்துள்ளது. 13 போட்டிகள் டிராவில் முடிந்தன. வங்கதேசத்தை இம்முறை இம்மைதானத்தில் முதல் முறையாக இந்தியா எதிர்கொள்கிறது. இம்மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி இந்தியா: 676-6 இலங்கைக்கு எதிராக, 1986.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

க்ரீன் பார்க் மைதானத்தில் இம்முறை கருமண்ணில் உருவாக்கப்பட்டுள்ள பிட்ச் திறமையை வெளிப்படுத்தும் அனைவருக்கும் சாதகமாக இருக்கும் என்று அதன் தயாரிப்பாளர் சிவ்குமார் சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். எனவே முதலிரண்டு நாட்கள் புதிய பிட்ச் நல்ல வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் ஆரம்பகட்ட நாட்களில் சூழ்நிலையை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்க முடியும். அதே போல கான்பூரில் மழை பெய்வதற்கான சூழ்நிலைகளும் காணப்படுவதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் உதவி கிடைக்கும். ஆனால் கடைசி 3 நாட்களில் ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி போட்டியின் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள்.

இதையும் படிங்க: கான்பூர் டெஸ்ட்டில் 3 ஆவது சுழற்பந்து வீச்சாளராக அவரை சேருங்க – சஞ்சய் மஞ்சரேக்கர் வலியுறுத்தல்

370, 322, 253, 137 என்பது இந்த மைதானத்தில் 4 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோராகும். அத்துடன் வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளில் 7 முறை முதலில் பேட்டிங் செய்த அணியும் 3 முறை 2வது பேட்டிங் செய்த அணியும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement