IND vs BAN : 2வது டெஸ்ட் நடைபெறும் தாக்கா மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட் இதோ

Sher- E-Bangla Stadium Cricket Ground Dhaka
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடி வரும் இந்தியா முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இழந்தாலும் அடுத்ததாக நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியுள்ள இந்தியா முதல் போட்டியில் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே 5 நாட்களும் சவாலை கொடுத்த வங்கதேசத்தை தோற்கடித்து பாதி வெற்றியை கண்டுள்ளது.

மீதி வெற்றியை டிசம்பர் 22ஆம் தேதியன்று துவங்கும் 2வது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வசப்படுத்த போராட காத்திருக்கும் இந்திய அணி ரோகித் சர்மா முழுமையாக குணமடையாததால் மீண்டும் கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்குகிறது. அவர் சுமாராக செயல்பட்டாலும் எஞ்சிய வீரர்கள் அசத்தலாக செயல்படுவதால் இப்போட்டியிலும் வென்று 2 – 0 (2) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றியுடன் ஒருநாள் தொடரில் சந்தித்த தோல்விக்கு வங்கதேசத்துக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.

- Advertisement -

தாக்கா மைதானம்:
மறுபுறம் ஏற்கனவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் இத்தொடரை வெல்லும் வாய்ப்பையும் இழந்த வங்கதேசம் குறைந்தபட்சம் கடைசி போட்டியில் வென்று வைட்வாஷ் தோல்வியை தவிர்க்கப் போராட உள்ளது. அந்த வகையில் இருநாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்போட்டி வங்கதேச தலைநகர் தாக்காவில் இருக்கும் சேர்-ஈ-பங்களா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு துவங்குகிறது. கடந்த 2007 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வரும் இம்மைதானத்தில் வரலாற்றில் 2 முறை இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியுள்ளன.

1. 2006இல் வரலாற்றில் இம்மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் வங்கதேசத்தை இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா அதன் பின் 2010இல் 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (265) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (143) குவித்த இந்திய பேட்ஸ்மேனாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அதிக சதங்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்களாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராகுல் டிராவிட் (தலா 2) ஆகியோர் உள்ளனர். இந்த மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை (17) எடுத்த இந்திய பவுலராக ரவிச்சந்திரன் அஷ்வின் உள்ளார். சிறந்த பந்து வீச்சை (4/32) பதிவு செய்த இந்திய பவுலராக இர்பான் பதான் உள்ளார்.

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் தாக்கா நகரில் டிசம்பர் 22 முதல் 26 வரை லேசான மேகமூட்டத்துடன் வறண்ட வானிலையே நிலவும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த போட்டி முழுமையாக நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லை என்று உறுதியாக நம்பலாம்.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் தாக்கா மைதானத்தில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகள் நடைபெற்றது. வங்கதேசம் வென்ற அந்த 2 போட்டிகளிலும் பேட்ஸ்மேன்கள் திணறியதையும் ஸ்பின்னர்கள் ஆரம்பத்திலேயே ஆதிக்கம் செலுத்தியதையும் பார்த்தோம். அந்த போட்டிகள் நடைபெற்று 2 வாரங்களில் நடைபெறும் இப்போட்டியிலும் கிட்டத்தட்ட அதே போன்ற சூழ்நிலைகளே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இப்போட்டிகாக புதிய பிட்ச் தயாரிக்கப்பட்டிருக்கும் என்பதால் முதல் 2 – 3 நாட்கள் வரை பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தலாம். குறிப்பாக ஆரம்பகட்ட சவாலை எதிர்கொண்டு நங்கூரமாக நிற்கும் பேட்ஸ்மேன்கள் பின்னர் எளிதாக பெரிய ரன்களை குவிக்கலாம். ஏனெனில் வரலாற்றில் இங்கு நடைபெற்ற முதல் போட்டியில் சச்சின், தினேஷ் கார்த்திக், வாசிம் ஜாபர், டிராவிட் என 4 பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்த 4 சதங்களை அடித்ததை இந்திய ரசிகர்கள் மறந்திருக்க முடியாது. கடைசியாக கடந்த மே மாதம் நடைபெற்ற போட்டியிலும் இலங்கை – வங்கதேச பேட்ஸ்மேன்கள் 4 சதங்கள் அடித்தனர்.

இதையும் படிங்க: அந்த இந்திய வீரர் தான் என்னோட இன்ஸ்பிரேஷன். அவரை மாதிரியே நான் இருக்கனும்னு எனக்கு ஆசை – மிட்சல் ஸ்டார்க்

அந்த வகையில் இம்மைதானத்தில் முதல் 3 நாட்கள் பேட்ஸ்மேன்கள் ராஜாங்கம் நடத்தலாம். அதே சமயம் வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இருப்பினும் இப்போட்டியின் வெற்றியை ஸ்பின்னர்கள் தான் தீர்மானிப்பார்கள். அத்துடன் இங்கு வரலாற்றில் நடைபெற்ற 23 போட்டிகளில் 12 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகள் வென்றுள்ளது. இங்கு சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 342 ஆகும். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement