இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் இரண்டாவது போட்டியிலும் வங்கதேசத்தை வீழ்த்தி ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்ற இந்திய அணி தயாராகியுள்ளது.
மறுபுறம் அடுத்தடுத்து தோல்விகளை பரிசளித்து வரும் இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்ய வங்கதேசம் போராட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்போட்டி அக்டோபர் 9ஆம் தேதி தலைநகர் டெல்லியில் இருக்கும் அருண் ஜெட்லி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7:00 மணிக்கு துவங்குகிறது. பெரோஷா கோட்லா என்ற பெயருடன் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள இம்மைதானம் 1883ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
டெல்லி மைதானம்:
தற்போது 55000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ள இப்மைதானத்தில் வரலாற்றில் 7 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 1 வெற்றியும் 2 தோல்விகளையும் சந்தித்துள்ளது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் தான் ஒட்டுமொத்த வரலாற்றிலேயே இந்தியாவை முதலும் கடைசியுமாக வங்கதேசம் தோற்கடித்தது.
வெதர் ரிப்போர்ட்:
டெல்லி நகரில் அக்டோபர் ஒன்பதாம் தேதி மழை பெய்வதற்கான வாய்ப்பில்லை என்றும் 50 – 54% ஈரப்பதமான சூழ்நிலை நிலவும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவிக்கிறது. எனவே இந்த போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.
பிட்ச் ரிப்போர்ட்:
அருண் ஜெட்லி மைதானம் ஐபிஎல் தொடரிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் பேட்டிங்க்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த 2023 உலகக் கோப்பை, 2024 ஐபிஎல் தொடர்களில் இங்கே பவுலர்களை பேட்ஸ்மேன்கள் சரமாரியாக அடித்து நொறுக்கி பெரிய ரன்கள் குவித்தனர். எனவே இம்முறையும் சூழ்நிலை உணர்ந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம்.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறப்போவது எப்போது? – சிறுவயது பயிற்சியாளர் கருத்து
மறுபுறம் பவுலர்கள் சரியான லைன், லென்த் ஆகியவற்றை பின்பற்றி நன்றாக பந்து வீசினால் மட்டுமே விக்கெட்டுகளை எடுக்க முடியும். இங்கு கடைசியாக விளையாடிய 10 டி20 போட்டிகளில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 187 ஆகும். இங்கே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 3 முறையும் சேசிங் செய்த அணிகள் 4 முறையும் வென்றுள்ளன. எனவே டாஸ் வெல்லும் கேப்டன் பனியின் தாக்கத்தையும் கருத்தில் கொண்டு முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.



