இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நவம்பர் 22-ஆம் தேதியான இன்று பெர்த் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணி 2 அறிமுக வீரர்களுடன் இந்த போட்டியில் களமிறங்கியது.
முதல் நாளில் நடைபெற்ற சாதனை :
இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 49.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களை மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக நிதீஷ் குமார் 41 ரன்களையும், ரிஷப் பண்ட் 37 ரன்களையும் குவித்து அசத்தினர்.
அவர்கள் இருவரை தவிர்த்து மற்ற எந்த வீரரும் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்ஸ்சில் மிகச் சிறப்பாக ரன் குவிப்பில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்திய அணியும் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்த போட்டியின் முதல் நாளான இன்று ஆட்டநேர முடிவில் 27 ஓவர்களை சந்தித்து ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 67 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது.
இந்திய அணி சார்பாக பும்ரா நான்கு விக்கெட்டுகளையும், சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்ஷித் ராணா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து நாளை ஆஸ்திரேலிய அணி 83 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது முதல் நாளிலேயே 17 விக்கெட் விழுந்துள்ள சம்பவம் தற்போது சாதனையாக மாறியுள்ளது. மேலும் இந்த 17 விக்கெட்டுகளும் வேகப்பந்து வீச்சாளர்களால் மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 1952 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது முதல் நாளில் 17 விக்கெட் வீழ்த்தப்பட்டது.
இதையும் படிங்க : ரிட்டயர்டு ஆகும் நேரம் வந்துடுச்சி.. ஆஸ்திரேலிய மண்ணிலும் விராட் கோலிக்கு தொடரும் சோகம் – விவரம் இதோ
அதனை தொடர்ந்து தற்போது 72 ஆண்டுகள் கழித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியின் முதல் நாளில் 17 விக்கெட்டுகள் விழுந்துள்ளன. இந்த போட்டியின் முதல் நாளே 17 விக்கெட் விழுந்துள்ளதால் நிச்சயம் மூன்று அல்லது நான்கு நாட்களிலேயே இந்த போட்டியில் முடிவு கிடைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.



