IND vs AUS : 4வது போட்டி நடைபெறும் அஹமதாபாத் மைதானம் எப்படி? புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Ahmedabad Motera Cricket Stadium ground
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றிய இந்தியா 3வது போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 2 – 1* (4) என்ற கணக்கில் முன்னிலை வகித்தாலும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற கடைசி போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொறுத்த வரை அஷ்வின், ஜடேஜா, அக்சர் படேல் ஆகியோர் அடங்கிய சுழல் பந்து வீச்சு துறை மற்றும் ஆல்ரவுண்டர்கள் துறை வலுவாக உள்ளது.

சொல்லப்போனால் அவர்களால் தான் இதுவரை இந்தியா 2 வெற்றிகளையும் பெற்றுள்ளது. எனவே சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் கடைசி போட்டியில் வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. மறுபுறம் 4 – 0 (4) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் தோல்வி உறுதி என்ற வந்த விமர்சனங்களை 3வது போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் அடித்து நொறுக்கிய ஆஸ்திரேலியா தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் தகுதி பெற்றது.

- Advertisement -

அஹமதாபாத் மைதானம்:
எனவே ஏற்கனவே தொடரை இழந்தாலும் குறைந்தபட்சம் 2 – 2 (4) என்ற கணக்கில் சமன் செய்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க ஆஸ்திரேலியா போராட உள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள இப்போட்டி மார்ச் 9ஆம் தேதி காலை 9.30 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் துவங்குகிறது. “மோட்டேரா” என ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ள இந்த மைதானம் தற்போது 1,32,000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் உலகிலேயே மிகப்பெரிய சாதனை கிரிக்கெட் மைதானமாக உருவாக்கப்பட்டுள்ளது.

1. 1983 முதல் இங்கே டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றாலும் புதிய மைதானம் உருவாக்கப்பட்ட 2021க்குப்பின் 2 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிராக நடந்த அந்த 2 போட்டிகளிலும் இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில் முதல் முறையாக தற்போது ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. மொத்தமாக இங்கு வரலாற்றில் களமிறங்கிய 14 போட்டிகளில் 6 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்தியா 6 போட்டிகளை ட்ரா செய்துள்ளது. 2 போட்டிகளில் தோற்றுள்ளது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக ராகுல் டிராவிட் (771 ரன்கள்) உள்ளார். இங்கே ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அதிக சதங்கள் (தலா 3) அடித்த பேட்ஸ்மேன்களாக உள்ளனர். அதிக அரை சதங்கள் அடித்த வீரராக விவிஎஸ் லக்ஷ்மன் (5) உள்ளார்.

3. இந்த மைதானத்தில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த வீரராக அனில் கும்ப்ளே (36) உள்ளார். இந்த மைதானத்தில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்துள்ள பவுலர் கபில் தேவ் : 9/83, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 1983

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
இந்தியாவில் இருக்கும் இதர மைதானங்களைப் போலவே அகமதாபாத் மைதானமும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இங்கு செம்மண்ணால் உருவாக்கப்பட்டுள்ள பிட்ச் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது இயற்கையாகவே அதிக சுழலுக்கு கை கொடுக்கும் என்ற நிலைமையில் ஏற்கனவே இத்தொடரின் 3 போட்டிகளிலும் இந்திய அணி நிர்வாகத்தின் விருப்பத்திற்கேற்ப சுழலுக்கு சாதகமான பிட்ச் அமைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் இப்போட்டியில் இந்திய அணி நிர்வாகம் எதுவும் கேட்டுக்கொள்ளாததால் தாங்கள் விரும்பும் பிட்ச் அமைக்க உள்ளதாக அகமதாபாத் மைதானம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எது எப்படியிருந்தாலும் இப்போட்டியில் ஆரம்பத்திலேயே பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டு பெரிய ரன்கள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்துவார்கள். இந்த மைதானத்தில் 338, 337, 236, 147 என்பது 1, 2, 3, 4 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோராகும். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் எந்த முடிவை எடுத்தாலும் இந்த மைதானத்தில் தங்களுடைய இன்னிங்ஸில் சிறப்பாக பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்தால் மட்டுமே வெற்றி காண முடியும்.

இதையும் படிங்க:IND vs AUS : மெல்போர்ன் மைதான சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அகமதாபாத் டெஸ்ட் – நாளைக்கு வேர்ல்டு ரெக்கார்ட் கன்பார்ம்

வெதர் ரிப்போர்ட்: இப்போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் அகமதாபாத் நகரை சுற்றிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

Advertisement