IND vs AUS : 3வது போட்டி நடைபெறும் இந்தூர் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரங்கள், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரின் முதலிரண்டு போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று 2 – 0* (4) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. அதனால் 2017, 2018/19, 2020/21, 2023* ஆகிய 4 அடுத்தடுத்த பார்டர் – கவாஸ்கர் கோப்பைகளை வென்ற முதல் அணியாக சாதனை படைத்துள்ள இந்தியா ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ளது. மேலும் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் சொந்த மண்ணில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வரும் இந்தியா 3வது போட்டியிலும் அதே போன்ற வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஆரம்பத்திலேயே இத்தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

இந்திய அணியில் பந்து வீச்சு துறை சிறப்பாக செயல்படும் நிலையில் பேட்டிங் துறையில் ரோஹித் சர்மா மற்றும் அஷ்வின் – அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து ஏனைய வீரர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. மறுபுறம் 2004க்குப்பின் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அதற்காக பிட்ச் பற்றி விமர்சித்து வாயில் பேசியதை செயலில் காட்டாமல் படுதோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டுள்ளது.

- Advertisement -

இந்தூர் மைதானம்:
மேலும் தரமான சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள தேவையான டெக்னிக் தெரியாமல் திண்டாடும் ஆஸ்திரேலியா கமின்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் அடுத்தடுத்த தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தையும் காப்பாற்றிக் கொள்ள போராட உள்ளது. அதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இத்தொடரின் 3வது போட்டி மார்ச் 1ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் இந்தூர் நகரில் உள்ள ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.

1. கடந்த 2006 முதல் சர்வதேச போட்டிகள் நடைபெற்று வரும் இந்த மைதானத்தில் 2016 முதல் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான அந்த 2 போட்டியிலும் வென்றுள்ள இந்தியா முதல் முறையாக ஆஸ்திரேலியாவை தற்போது எதிர்கொள்கிறது.

- Advertisement -

2. இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராக அஜிங்கிய ரகானே (297) உள்ளார். இந்த மைதானத்தில் ரகானே, விராட் கோலி, புஜாரா, மயங் அகர்வால் அதிகபட்சமாக தலா 1 சதங்கள் அடித்துள்ளனர். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் மயங் அகர்வால் : 243, வங்கதேசத்துக்கு எதிராக, 2019.

3. இந்த மைதானத்தில் அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் (18) உள்ளார். இங்கு சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த பவுலர் : ரவிச்சந்திரன் அஷ்வின் – 7/59, நியூசிலாந்துக்கு எதிராக, 2016. இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி : இந்தியா – 557/5 டிக்ளேர், நியூசிலாந்துக்கு எதிராக, 2016

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:
ஹோல்கர் மைதானம் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பேட்டிங்க்கு அதிக சாதகமாக இருந்து வருகிறது. இருப்பினும் டெஸ்ட் போட்டிகள் இங்குள்ள செம்மண்ணால் உருவாக்கப்பட்ட பிட்ச்சில் நடைபெறும் என்பதால் முதலிரண்டு நாட்களில் ஸ்பின்னர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் லேசான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். ஆனால் கடைசி இரண்டரை நாட்களில் ஸ்பின்னர்கள் இதர இந்திய மைதானங்களை போல் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தி அதிக விக்கெட்டுகளை எடுத்து அச்சுறுத்தலை கொடுப்பார்கள்.

எனவே முதலிரண்டு நாட்களில் புத்துணர்ச்சியுடன் இருக்கக்கூடிய பிட்ச்சில் பேட்ஸ்மேன்கள் கால சூழ்நிலையில் கணித்து நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தி நன்கு செட்டிலாகி எளிதாக பெரிய ரன்களை குவித்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. மேலும் வரலாற்றில் இங்கு நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் 353, 396, 214, 153 என்பது 1, 2, 3, 4 இன்னிங்ஸ்களின் சராசரி ஸ்கோராகும். எனவே முதல் இரண்டரை நாட்கள் பேட்டிங்கு சாதகமாகவும் கடைசி இரண்டரை நாட்கள் பவுலிங்க்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இம்மைதானத்தில் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

இதையும் படிங்க:வீடியோ : டி20யை மிஞ்சிய திரில்லர், 1 ரன் வித்யாசத்தில் இங்கிலாந்தை சாய்த்த நியூஸிலாந்து, 30 வருட வரலாற்று வெற்றி

வெதர் ரிப்போர்ட்:
இப்போட்டி நடைபெறும் இந்தூர் நகரை சுற்றிய பகுதிகளில் 5 நாட்களிலும் மழைக்கான வாய்ப்பில்லை என்று இந்திய வானிலை மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement