
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் சவாலான ஆஸ்திரேலியாவை சுப்மன் கில் தலைமையிலான புதிய இந்திய அணி சந்திக்கிறது. அவருடைய தலைமையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் கடைசி முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடுகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவுக்காக கடந்த 15 வருடங்களாக விளையாடி வரும் அவர்கள் 3 வகையான கிரிக்கெட்டிலும் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளனர். அப்படிப்பட்ட அவர்கள் ஏற்கனவே டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டனர். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடப் போகும் அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்கள்.
ஆனால் அப்போது அவர்களால் 38, 40 வயதில் அசத்த முடியுமா என்று தேர்வுக்குழு சந்தேகிக்கிறது. அதனால் இப்போதே ரோஹித் சர்மாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு கில் தலைமையில் புதிய இந்திய அணியை உருவாக்கத் தொடங்கியுள்ளது. அதன் காரணமாக 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவார்களா என்பது சந்தேகமாகியுள்ளது. சொல்லப்போனால் இந்த ஆஸ்திரேலிய தொடருடன் அவர்கள் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
எனவே இத்தொடருடன் அவர்கள் ஓய்வு பெறக்கூடாது என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதல் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் துவங்குகிறது. அப்போட்டியில் கம்பேக் கொடுக்க காத்திருக்கும் விராட் கோலி, ரோஹித் சர்மாவுடன் மழையும் விளையாடக் காத்திருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இப்போட்டி நடைபெறும் பெர்த் ஆப்டஸ் மைதானப் பகுதிகளில் அக்டோபர் 19ஆம் தேதி சராசரியாக 50% மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக போட்டி ஆஸ்திரேலிய நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு துவங்க உள்ளது. அப்போதிலிருந்து இரவு 9 மணி வரை பெர்த் நகரில் சராசரியாக 30 – 50% மழை பொழிவதற்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: இந்தியா – ஆஸி: முதல் ஒன்டே நடைபெறும் ஆப்டஸ் மைதானம் எப்படி? வரலாற்று புள்ளிவிவரம் – பிட்ச் ரிப்போர்ட்
அதனால் இப்போட்டியில் டாஸ் வீசுவதற்கு தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போட்டியின் நடுவே அவ்வப்போது மழை குறுக்கிடும் என்று நம்பப்படுகிறது. அதனால் இப்போட்டி முழுமையாக நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் முடிந்தளவு ஓவர்கள் குறைப்பட்டு வெற்றியாளர் கிடைக்கும் அளவுக்கு இப்போட்டி நடைபெறும் என்று நம்பலாம்.