
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அண்டர் 19 அணி அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 21ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு துவங்கியது. பிரிஸ்பேன் நகரில் இருக்கும் இயன் ஹீலி மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அண்டர்-19 அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவரில் போராடி 225/9 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஓப்பனிங் வீரர்கள் அலெக்ஸ் டர்னர், சைமன் பட்ச் ஆரம்பத்திலேயே கிசான் குமார் வேகத்தில் டக் அவுட்டானார்கள். மிடில் ஆர்டரில் ஸ்டீபன் ஹோகன் 39, டாம் ஹோகன் 41 ரன்கள் எடுத்த போதிலும் கேப்டன் வில் 17, யாஷ் தேஷ்முக் 0 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.
ஆனால் லோயர் ஆடரில் அதிரடியாக விளையாடிய ஜோன் ஜேம்ஸ் 77* (68) ரன்கள் விளாசி கை கொடுத்தார். இந்தியா அண்டர் 19 அணிக்கு அதிகபட்சமாக கிசான் குமார் 2, கனிஷ்க் சவ்கான் 2, ஹெனில் பட்டேல் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியா அண்டர் 19 அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே 6, விஹான் மல்கோத்ரா 9 ரன்களில் சார்லஸ் வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.
இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் வைபவ் சூரியவன்சி அதிரடியாக விளையாடினார். சமீப காலங்களாகவே உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி பலரது பாராட்டுகளைப் பெற்ற அவர் இப்போட்டியிலும் 7 பவுண்டரி 1 சிக்ஸர்களை பறக்க விட்டு 38 (22) ரன்களை 172.73 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வேதாந் திரிவேதி – அபிஞான் குண்டு ஆகியோர் ஜோடி சேர்ந்து அசத்தினர்.
10வது ஓவரில் இணைந்த அவர்கள் ஆஸ்திரேலிய பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்து அரை சதத்தை அடித்தனர். நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடிய அந்த ஜோடி கடைசி வரை அவுட்டாகாமல் போட்டியை முடித்தது. அதில் 8 பவுண்டரி 5 சிக்சரை பறக்க விட்ட குண்டு 87* (74), திரிவேதி 61* (69) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தனர்.
இதையும் படிங்க: சுப்மன் கில்லிடம் இருக்கும் குறையை சரி செய்ய பந்துவீச்சாளராக மாறிய அபிஷேக் சர்மா – இதுதான் பிரண்ட்ஷிப்
அதனால் 30.3 ஓவரிலேயே 227/3 ரன்களை எடுத்த இந்தியா அண்டர் 19 அணி கிட்டத்தட்ட 20 ஓவர்கள் மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. மேலும் 1 – 0* (3) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இளம் இந்தியா இச்சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளது. மறுபுறம் இளம் ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியிலேயே தோற்றது.