ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி முடித்துள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற வேளையில் அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது வங்கதேச அணியை 280 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையே கான்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியை கிட்டத்தட்ட இரண்டரை நாட்கள் மழையால் பாதிக்கப்பட்டதால் போட்டியின் முடிவு கிடைக்குமா? என்ற நிலை இருந்தது. ஆனாலும் நான்காம் நாளில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது அதிரடியாக பேட்டிங் செய்ததோடு பந்து வீச்சிலும் கலக்கியது.
வங்கதேச அணியை இரண்டாவது இன்னிங்ஸின் போது சொற்ப ரன்களில் வீழ்த்திய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னதாக வெறும் 10 போட்டிகள் மட்டுமே இந்திய அணி விளையாடயிருந்த வேளையில் இந்த இரண்டாவது போட்டியின் வெற்றி இந்திய அணிக்கு மிக முக்கியமான வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அடுத்ததாக இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக 8 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அந்த எட்டு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றால் கூட இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.
இந்நிலையில் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்த பின்னர் வெளியான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இதுவரை இந்திய அணி 11 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, இரண்டு தோல்வி, ஒரு டிரா என 74.24 என்கிற சதவீதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
இதையும் படிங்க : வலிக்குது ரியாக்சன் பண்றதுக்குள்ள இந்தியா அடிச்சு நொறுக்கிட்டாங்க.. இதுக்காக அவரை பாராட்டுறேன்.. வங்கதேச கோச்
ஆஸ்திரேலிய அணி இந்த பட்டியலில் இரண்டாவது இடத்திலும், இலங்கை அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. நான்காவது இடத்தில் இங்கிலாந்து அணியும், ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்க அணியும், 6-வது இடத்தில் நியூசிலாந்து அணியும் இருக்கின்றன. அதே வேளையில் இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரை இழந்த வங்கதேச அணி ஐந்தாவது இடத்திலிருந்து ஏழாவது இடத்திற்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.