
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்பானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பிடித்திருந்த நான்கு அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டங்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் தாங்கள் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதால் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.
இதன் காரணமாக பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் குரூப் ஏ பிரிவிலிருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது. அதே வேளையில் குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலும் அந்த அணிகளே அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குரூப் பி பிரிவில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணி வெளியேறும் நிலையில் உள்ளது. ஒருவேளை இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமெனில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தாங்கள் விளையாடும் ஒரு போட்டியில் தோற்று இங்கிலாந்து அணி தாங்கள் விளையாடும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஏதாவது ஒரு மாற்றம் நிகழும்.
மற்றபடி தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் அரையிறுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்பு. இந்நிலையில் இந்திய ஏ பிரிவில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி எந்த அணியுடன் அரையிறுதி போட்டியில் விளையாடும்? என்பது குறித்த தகவலை இங்கு காணலாம். அந்த வகையில் இந்திய அணி தாங்கள் கடைசியாக உள்ள லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
அந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் குரூப் பி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணியுடன் விளையாடும். ஒருவேளை இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தால் குரூப் பி பிரிவில் முதல் இடத்தில் இருக்கும் அணியுடன் மோதும். ஆனால் இந்த தொடரில் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தும் பட்சத்தில் முதல் அணியாக குரூப் பி பிரிவில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியை தான் எதிர்கொள்ளும் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : மாஸ்டர்ஸ் லீக்: 217 சேசிங்.. வாட்சன் அதிரடி.. ஆஸியை முரட்டுத்தனமாக அடித்து நொறுக்கிய வெ.இ சிமென்ஸ்
இந்த தொடரின் அரையிறுதி போட்டியானது மார்ச் 4-ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. அதேபோன்று அந்த அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை அதே துபாய் மைதானத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.