
கடந்த 2024-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை வென்று அசத்தியிருந்தது. அதனை தொடர்ந்து நடப்பு சாம்பியனாக சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி நடைபெற்று முடிந்த 2026 டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்று மீண்டும் ஒருமுறை நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது.
இந்திய அணி பெற்ற இந்த பிரமாதமான வெற்றியின் மூலம் மூன்றாவது முறையாக டி20 போட்டிகளுக்கான சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியிருந்தது. அதோடு அடுத்தடுத்து இரண்டு உலக கோப்பைகளை வென்ற அணியாகவும், சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 உலககோப்பையை வென்ற அணியாகவும் இந்திய அணி மாபெரும் சாதனையை நிகழ்த்தி இருந்தது.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இறுதிப்போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் மேலும் ஒரு சாதனையையும் இந்திய அணி சமன் செய்து அசத்தியுள்ளது. அந்த வகையில் இந்திய அணி நிகழ்த்திய சாதனை யாதெனில் :
டி20 உலக கோப்பை போட்டிகளில் பவர்பிளே ஓவர்களான முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணியாக வெஸ்ட் இண்டீஸ் அணி முதலிடத்தில் இருந்தது. கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக பிரிட்ஜ்டவுன் நகரில் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 92 ரன்கள் அடித்தது.
இதையும் படிங்க : அபிஷேக் சர்மாவை கடந்து சிக்ஸர்களில் புதிய சாதனையை நிகழ்த்திய சஞ்சு சாம்சன் – விவரம் இதோ
அதுவே டி20 உலக கோப்பை போட்டிகளில் பவர்பிள் ஓவர்களில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்து வந்தது. இவ்வேளையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியின் போது இந்திய அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் குவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் அந்த சாதனையை சமன் செய்தது குறிப்பிடத்தக்கது.