ஐசிசி சாம்பியன்ஸ் கிரிக்கெட் தொடரானது நாளை பிப்ரவரி 19-ஆம் தேதி கராச்சி மைதானத்தில் துவங்க இருக்கிறது. கோலாகலமாக நடைபெற இருக்கும் இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான அணி நியூசிலாந்து அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. அதற்கடுத்து இரண்டாவது போட்டியாக இந்திய அணி தங்களது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்த்து பிப்ரவரி 20-ஆம் தேதி துபாயில் விளையாட இருக்கிறது.
இந்திய அணியிலிருந்து வெளியேறிய மோர்னே மோர்கல் : என்ன காரணம்?
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே துபாய் சென்று ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வரும் வேளையில் இந்த தொடருக்கான இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் இந்திய அணியில் இருந்து வெளியேறி தாயகம் திரும்பி உள்ளார்.
ஏற்கனவே இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய வேளையில் தற்போது மோர்னே மோர்கலும் இந்திய அணியில் இருந்து வெளியேறி தென்னாப்பிரிக்கா சென்றடைந்தது இந்திய அணிக்கு ஒரு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேலும் இவர் இப்படி இந்திய அணியில் இருந்து திடீரென வெளியேற என்ன காரணம்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகி உள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்டு வரும் மோர்னே மோர்கலின் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.
இதன் காரணமாக அவரது இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்க சென்றுள்ள மோர்கல் மீண்டும் எப்போது இந்திய அணியுடன் இணைவார் என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த தொடரின் முதல் சில போட்டிகள் முடிவடைந்த பின்னர் அவர் நேரடியாக துபாய் சென்று இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : இந்திய அணி கொஞ்சம் உஷாரா இருக்கனும்.. செமி பைனலுக்கு செல்லப்போகும் 4 டீம் இதுதான் – அஷ்வின் கணிப்பு
கம்பீர் தலைமையிலான இந்திய அணி ஏற்கனவே சற்று சறுக்கலை சந்தித்து வரும் வேளையில் தற்போது இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைப்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



