தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடியிருந்த இந்திய அணியானது அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான டி20 இந்திய அணியை பி.சி.சி.ஐ அண்மையில் அறிவித்தது.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது? :
அதில் டி20 உலககோப்பை தொடரில் விளையாடும் வீரர்களே இந்த நியூசிலாந்து டி20 தொடரிலும் விளையாடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இடம் பெற்று விளையாடி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அணி எப்போதெல்லாம் ஒருநாள் தொடரில் விளையாடுகிறதோ அப்போதெல்லாம் இவர்களது பெயர் ஒருநாள் அணியில் இடம் பெறுமா? என்கிற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஜனவரி 3-ஆம் தேதி அல்லது 4-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை சுப்மன் கில் தொடர்ந்து வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது.
அதோடு சமீபத்தில் மிகச் சிறப்பான பார்மில் இருக்கும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவும் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. அதோடு ஆஸ்திரேலிய தொடரின் போது காயத்தை சந்தித்து வெளியேறியிருந்த இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் கம்பேக் கொடுக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க : 152 விக்கெட்ஸ்.. இந்தியாவின் தீப்தி சர்மா புதிய உலக சாதனை.. 2025 ஒன்டேவிலும் உச்சம் தொட்டு உலக சாதனை
அதேவேளையில் ஹார்டிக் பாண்டியா மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு இந்த ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. அது தவிர்த்து சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கும் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும். இதன் காரணமாக இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இடம்பெறப்போகும் வீரர்கள் யார்? யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.



