ஐசிசி 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை முதல் முறையாக இந்தியா சொந்த மண்ணில் வென்று புதிய சரித்திரம் படைத்தது. அதைத் தொடர்ந்து இலங்கை மகளிரணிக்கு எதிராக இந்தியா தங்களது மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் 5 போட்டிகளிலும் இலங்கையை தோற்கடித்த இந்தியா 5 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட்டது.
குறிப்பாக நேற்று நடைபெற்ற கடைசிப் போட்டியில் இலங்கையை 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது. கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 175/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 68 (43), அமன்ஜோத் கௌர் 21 (18), அருந்ததி ரெட்டி 27* (11) ரன்கள் எடுத்தனர்.
தீப்தி புதிய உலக சாதனை:
இலங்கைக்கு அதிகபட்சமாக கவிசா திலாரி, ராஸ்மிகா, கேப்டன் சமாரி அத்தப்பத்து தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்கள். அடுத்ததாக விளையாடிய இலங்கை முடிந்தளவு போராடியும் இந்தியாவின் நல்ல பந்து வீச்சில் 20 ஓவரில் 160/7 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஹாசினி பெரேரா 65, இமேஷா துலானி 50 ரன்களை எடுத்த போதிலும் மற்ற வீராங்கனைகள் 15 ரன்கள் கூட தாண்டவில்லை.
மறுபுறம் தொடர்ந்து 5வது வெற்றி பெற்ற இந்தியாவுக்கு தீப்தி சர்மா, அருந்ததி ரெட்டி, வைஷ்ணவி சர்மா, ஸ்ரீ சரணி, ஸ்னே ராணா, அமன்ஜோத் கௌர் தலா 1 விக்கெட் சாய்த்தனர். குறிப்பாக வலது கை ஸ்பின்னரான தீப்தி சர்மா இதையும் சேர்த்து 133 போட்டிகளில் 152 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். இதன் வாயிலாக மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் சாய்த்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையை தீப்தி படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு டபுள் பெருமை:
இதற்கு முன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேகன் ஸ்கட் 123 போட்டிகளில் 151 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை. கடந்த போட்டியிலேயே அந்த சாதனையை சமன் செய்திருந்த தீப்தி இப்போட்டியில் முழுமையாக முறியடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இது மட்டுமின்றி நிறைவுக்கு வந்த 2025ஆம் ஆண்டில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் போட்டிகளில் அவர் 23 இன்னிங்ஸில் 39 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 77/5 டூ 175/7.. 5க்கு 5.. சறுக்கி எழுந்த இந்திய மகளிரணி இலங்கைக்கு எதிராக ஒய்ட்வாஷ் சாதனை வெற்றி
அதன் வாயிலாக 2025 சர்வதேச மகளிர் ஒருநாள் போட்டிகளில் அதிக எடுத்த விக்கெட்டுகள் வீராங்கனை என்ற உலக சாதனையையும் தீப்தி படைத்துள்ளார்: அந்த பட்டியல்:
1. தீப்தி சர்மா (இந்தியா): 39
2. ம்லபா (தென் ஆப்பிரிக்கா): 35
3. சோபி எக்லஸ்டன் (இங்கிலாந்து): 28
3. ஸ்னே ராணா (இந்தியா): 28
4. அலனா கிங் (ஆஸ்திரேலியா): 25



