ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் என அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களை இழந்ததன் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை முதல் முறையாக தவறவிட்டு பெரிய பின்னடைவை சந்தித்தது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு எப்போது? :
இந்நிலையில் அடுத்த 2025-2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரினை குறிவைத்து இந்திய அணி தங்களது அடுத்த தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி துவங்க உள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை என்பதனால் இம்முறை இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றியாக வேண்டிய முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.
இவ்வேளையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ளதால் இந்த தொடரில் பெரிய அளவில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மாவிற்கு பதிலாகவும், விராட் கோலிக்கு பதிலாகவும் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிக்க போகிறார்கள்? அணியில் உள்ள மொத்த வீரர்களின் தேர்வு எவ்வாறு இருக்கும்? என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடருக்கான டெஸ்ட் அணி எப்போது அறிவிக்கப்படும்? என்பது குறித்த முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி வரும் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாகவும் அதனை செய்தியாளர்கள் சந்திப்பில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், பயிற்சியாளர் கம்பீர் மற்றும் நிர்வாகிகள் பலர் இணைந்து அறிவிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ப்ளீஸ் இப்போதைக்கு இந்த முடிவை கைவிடுங்க.. விராட் கோலிக்கு வேண்டுகோள் வைத்த அம்பத்தி ராயுடு
டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரோகித் சர்மா ஓய்வு பெற்று விட்டதால் இனிவரும் இளம் வீரர்களின் படை அடுத்தடுத்த டெஸ்ட் தொடர்களில் எவ்வாறு செயல்படப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



