இந்தியா – இலங்கை மோதி வந்த 2 போட்டிகள் டெஸ்ட் தொடர் நிறைவு பெற்றுள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று மொஹாலியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அசத்திய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து பெங்களூருவில் கடந்த மார்ச் 12-ஆம் தேதியன்று தொடங்கிய 2வது போட்டியிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா 238 ரன்கள் வித்தியாசத்தில் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இதன் வாயிலாக 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 2 – 0 என்ற கணக்கில் கைப்பற்றிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் மீண்டும் ஒரு ஒயிட்வாஷ் வெற்றியை பதிவு செய்து கோப்பையை வென்றது. முன்னதாக பெங்களூருவில் பகல் இரவாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடந்த 2-வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது.
பரிதாப இலங்கை:
அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 92 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டார். அதை தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி இந்தியாவின் அதிரடியான பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிக பட்சமாக ஏஞ்சலோ மேத்யூஸ் 43 ரன்கள் எடுத்தார்.

அதன் காரணமாக 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 303/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. இந்தியா சார்பில் மீண்டும் பேட்டிங்கில் ஜொலித்த ஷ்ரேயஸ் ஐயர் 67 ரன்கள் எடுத்தார். இறுதியில் 447 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு அதன் கேப்டன் திமுத் கருணரத்னே தனி ஒருவனாக சதமடித்து 107 ரன்கள் குவித்து தோல்வியை தவிர்க்க போராடினார்.
இருப்பினும் இதர வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 208 ரன்களுக்கு சுருண்ட அந்த அணி பரிதாப தோல்வி அடைந்தது. இதன் வாயிலாக இலங்கையின் இந்த இந்திய சுற்றுப் பயணத்தில் முதலில் நடந்த டி20 தொடரில் 3 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் தோல்வியை சந்தித்த அந்த அணி டெஸ்ட் தொடரிலும் ஒரு வெற்றியை கூட பதிவு செய்ய முடியாமல் மிக்பெரிய ஏமாற்றத்துடன் நாடு திரும்பியது.

அறிவிக்கப்படாத ஆட்டநாயகன் பும்ரா:
பெங்களூருவில் நடந்த 2வது போட்டியில் பேட்டிங்க்கு மிகுந்த சவாலாக இருந்த பிட்சில் முதல் இன்னிங்ஸில் 92 ரன்களும் 2-வது இன்னிங்ஸில் 67 ரன்களும் எடுத்து ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் வாயிலாக பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் 2 இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
இருப்பினும் இந்தப் போட்டியின் அறிவிக்கப்படாத ஆட்டநாயகன் என்று ஜஸ்பிரித் பும்ராவை அழைத்தால் அது மிகையாகாது. ஏனெனில் பொதுவாக 3-வது நாளுக்கு பின்பு தான் பிட்ச் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறும். ஆனால் பெங்களூருவில் நடந்த இந்த போட்டியின் முதல் நாளன்றே தாறுமாறாக சுழன்ற பிட்ச் சுழல்பந்து வீச்சுக்கு கைகொடுத்தது. அப்படிப்பட்ட வேகப்பந்து வீச்சுக்கு கை கொடுக்காத பெங்களூரு பிட்ச்சில் இளஞ்சிவப்பு நிற பந்தை கையில் எடுத்த ஜஸ்பிரித் பும்ரா அதிரடியாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை சாய்த்து 2-வது இன்னிங்ஸ்சில் இந்தியாவுக்கு 143 ரன்கள் முன்னிலை பெற்றுக்கொடுத்தார். அதன் காரணமாகவே இறுதியில் இந்திய அணியால் எளிதான வெற்றியை பதிவு செய்ய முடிந்தது.

பும்ரா முதலிடம்:
மேலும் முதல் இன்னிங்சில் 24 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணிக்கு எதிராக மிகச்சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற புதிய சாதனையையும் படைத்தார். மேலும் இப்போட்டியில் மொத்தம் 8 எடுத்த அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2021 – 2023 தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளராக முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த உலக கோப்பையில் இதுவரை 9 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் 40* விக்கெட்களை எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் ஷாஹீன் அப்ரிடி 32 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2021 – 23 தொடரின் ஒரு அங்கமாக நடைபெற்ற இந்த இலங்கை தொடரில் 2 – 0 என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்த இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை புள்ளி பட்டியல் இலங்கையை பின்னுக்கு தள்ளி 4-வது இடத்தை பிடித்துள்ளது.
இதையும் படிங்க : இதர அணிகளில் எட்டமுடியாத முரட்டுத்தனமான உலகசாதனையை நிகழ்த்திய இந்திய அணி – விவரம் இதோ
இதுவரை 12 போட்டிகளில் 58.33% புள்ளிகளைப் பெற்றுள்ள இந்தியா 4வது இடத்தில் உள்ளது. இதே புள்ளி பட்டியலில் முதல் 3 இடங்களில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. வரும் 2023 வரை இதுபோல நடைபெற உள்ள இந்த உலக கோப்பையின் லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.



