இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்று வந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிறைவு பெற்றுள்ளது. கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் துவங்கிய இந்த போட்டியில் 100 போட்டிகளில் விளையாடிய 12வது இந்திய வீரர் என்ற அபார சாதனை படைத்த விராட் கோலிக்கு சிறப்பு தொப்பியை பரிசளித்து பிசிசிஐ கௌரவித்தது.

அதை தொடர்ந்து நடந்த அந்த போட்டியில் நட்சத்திர இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா 175* ரன்களும் 9 விக்கெட்டுகளையும் எடுத்து ஒரு ஆல்ரவுண்டராக செயல்பட்டதால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 1 – 0* என ஏற்கனவே தொடரில் முன்னிலை பெற்ற இந்தியா இத்தொடரின் 2-வது போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது.
இந்தியா வைட்வாஷ் வெற்றி:
மார்ச் 12-ஆம் பெங்களூருவில் பகலிரவாக நடந்த அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து தனது முதல் இன்னிங்சில் 252 ரன்கள் எடுத்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக இலங்கை பந்துவீச்சாளர்களை தனி ஒருவனாக பந்தாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்கள் உட்பட 92 ரன்கள் எடுத்தார். அதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை மொகாலியில் நடந்த முதல் போட்டியை விட மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்தியூல் 43 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதன் காரணமாக 143 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா தனது 2-வது இன்னிங்சை 303/9 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக மீண்டும் சிறப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் 67 ரன்களும் ரிஷப் பண்ட் 50 ரன்களும் எடுத்தனர்.
இறுதியில் 447 என்ற மெகா இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு கேப்டன் திமுத் கருணரத்னே மட்டும் தனி ஒருவனாக சதமடித்து 107 ரன்கள் குவித்து தோல்வியை தவிர்க்க போராடினார். இருப்பினும் இதர வீரர்கள் இந்தியாவின் மிகத்துல்லியமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் அந்த அணி வெறும் 208 ரன்களுக்கு சுருண்டது. இதன் காரணமாக 238 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா 2 – 0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் மீண்டும் ஒரு வைட்வாஷ் வெற்றியைப் பதிவு செய்தது.

சொந்த மண்ணில் இந்தியாவின் ராஜாங்கம்:
இந்த வெற்றியின் வாயிலாக கடந்த நவம்பர் மாதத்திற்குப் பின் சொந்த மண்ணில் நியூஸிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக கடைசியா பங்கேற்ற 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து 14 போட்டிகளில் பங்கேற்ற இந்தியா 14 வெற்றிகளை பெற்று ஒரு தோல்வியை கூட பெறாமல் வலுவான அணியாக திகழ்கிறது. மேலும் இந்த இலங்கை டெஸ்ட் தொடரையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இந்தியா தனது 15-ஆவது தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.
ஆம் கடைசியாக கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்தது. அதன்பின் இதுவரை நடந்த 15 டெஸ்ட் தொடர்களில் ஒன்றைக்கூட தோற்காத இந்தியா தொடர்ச்சியாக 15 டெஸ்ட் தொடர்களிலும் தொடர் வெற்றிகளை பெற்று “டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி” என்ற உலக சாதனையை இன்னும் படைத்து வருகிறது. சொல்லப்போனால் இந்தியாவிற்கு அடுத்தபடியாக உலகில் வேறு எந்த அணியும் தனது சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடர்களுக்கும் மேல் வென்றதே கிடையாது.

இதிலிருந்து இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது. அந்த அளவுக்கு கடந்த 10 வருடங்களாக ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோற்காத இந்தியா சொந்த மண்ணில் ராஜாங்கம் நடத்தி வருகிறது என்றே கூறலாம். இத்துடன் கடந்த 2016ஆம் ஆண்டுக்கு பின் ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்த அணியாகவும் இந்தியா உலகசாதனை சாதனை படைத்துள்ளது. ஆம் கடந்த 2016க்கு பின் 67 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அதில் 41 வெற்றிகளை 61.12% என்ற வெற்றி சராசரியில் பதிவு செய்து உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இதில் 16 தோல்விகளை பதிவு செய்துள்ள இந்தியா 10 போட்டிகளை ட்ரா செய்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து 80 போட்டிகளில் 33 வெற்றிகளையும் 34 தோல்விகளையும் பெற்று 41.25% சராசரியுடன் 2-வது இடத்தில் உள்ளது. மொத்தத்தில் சொந்த மண்ணில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா ராஜாங்கம் நடத்துவது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.



